மே 5 வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் வக்பு வாரியத்துக்கு புது உறுப்பினர் நியமிக்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு; ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க ஒரு வாரம் கெடு

1 day ago 2

புதுடெல்லி: வக்பு சட்ட திருத்தம் அமலுக்கு வந்தபோதும் வரும் மே 5ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், வக்பு வாரியங்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யக்கூடாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், மேலும் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 140 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வக்பு வாரியத்தில் வேறு மதத்தை சார்ந்தவர்களை நியமனம் செய்வது ஏன்? இந்து சமய அறநிலையத்துறையில் வேறு மதத்தினரை நியமிப்பீர்களா? வக்பு சட்ட திருத்த விவகாரத்தில் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டது ஏன்? என்று ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பி இருந்தது.

இந்த வழக்கு இரண்டாம் நாளாக நேற்று மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த வக்பு சட்டத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ நீங்கள் தடை செய்ய போகிறீர்கள் என்றால் அது மிகவும் அரிதானதாகவே கருதப்படும். ஆனால் அதற்கு முன்பாக இந்த சட்டத்தின் நோக்கம், கடந்த கால வரலாறு உள்ளிட்டவற்றை நீதிமன்றம் கணக்கில் கொள்ள வேண்டும். அதற்கான காரணம் கிராமம், கிராமமாக வக்பு சொத்துகள் என மாற்றப்பட்டு வருகின்றது. மேலும் இது நாடாளுமன்றத்தால் நிறைவேற்றி கொண்டுவரப்பட்ட சட்டம் என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வக்பு சட்டம் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மிகவும் கடுமையான அணுகு முறையை மேற்கொண்டு இருக்கிறது. வக்பு வாரிய சட்ட திருத்தத்தில் சில சரத்துக்களை மட்டுமே பார்த்து விட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது. ஏனெனில் வக்பு விவகாரத்தில் லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டன. குறிப்பாக சில கிராமங்கள் கூட வக்பு நிலம் என எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் யாருக்கும் பாதகம் வந்துவிடக் கூடாது என்பதை அடிப்படையாக கொண்டுதான் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

எனவே இந்த விவகாரத்தில் விரிவான எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய எங்களுக்கு ஒருவாரம் அவகாசம் தர வேண்டும். அதுவரை எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம். ஏனெனில் எங்கள் தரப்பு விளக்கத்தை தர நீதிமன்றம் வழங்கும் அவகாச நேரத்தில் புதிய சட்டத்தின் மூலம் எந்தவித உறுப்பினர் நியமனமும் செய்யப்படாது. அதுவரை வக்பு வாரிய புதிய சட்ட திருத்தம் கண்டிப்பாக நிறுத்தி வைக்கப்படும் என்பதை நாங்கள் தற்போது அனைவரின் முன்னிலையிலும் உறுதி அளிக்கிறோம்” என்று கூறினார்.

இதையடுத்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராகேஷ் திவேதி ஆகியோர், “இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு விளக்கமளிக்க ஒருவாரம் அவகாசம் அளியுங்கள். அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அதுவரை வக்பு வாரிய புதிய சட்ட திருத்தத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருக்கும் விதமாக இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த விவகாரத்தில் தற்போது முழுமையாக எந்தவித உத்தரவும் பிறப்பிக்க போவதிலலை. இருப்பினும் சம்பந்தப்பட்ட நபர்கள் பாதிப்படைய கூடாது என்பதை அடிப்படையாக கொண்டும், அவர்களுக்கும் நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும் இடைக்காலமாக ஒரு உத்தரவை பிறப்பிக்கிறோம்.

வக்பு வாரிய புதிய சட்ட திருத்த விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், அடுத்த விசாரணை நடக்கும் மே 5ம் தேதி வரை தற்போது இருக்கும் நிலையே தொடர வேண்டும். அதாவது புதிய சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனமும் இருக்க கூடாது. ஏற்கனவே வக்பு என பதியப்பட்ட, வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்து கள் மீதும் எந்த புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. புதிய சட்டப்படி நில வகைப்படுத்தலும் இருக்கக் கூடாது. புதிய சட்ட திருத்தத்தை நிறுத்தி வைக்கிறோம் என்ற ஒன்றிய அரசின் உத்தரவாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்று கொள்கிறது. அதன் அடிப்படையில்தான் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. வக்பு வாரிய புதிய சட்ட திருத்தம் தொடர்பாக ஒன்றிய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும். அதற்கு அடுத்த ஐந்து நாட்களில் மனுதாரர்கள் கூடுதல் பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

* 5 மனுக்கள் மீது மட்டுமே விசாரணை
நீதிபதிகள் கூறுகையில், வக்பு சட்ட திருத்த விவகாரத்தில் மொத்தம் 140 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் விசாரிப்பது மிகவும் கடினம். அதனால் ஐந்து அல்லது ஆறு பிரதான மனுக்களை மட்டும் உச்ச நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும். இதில் எந்ததெந்த மனுக்களை முடித்து வைக்கிறோம் என்பதை வெளிப்படையாக தற்போது கூற முடியாது என்றனர்.

* திருத்த சட்டம் அமலில் இருக்கும் ஆனால் அதை செயல்படுத்த முடியாது: திமுக வழக்கறிஞர் பி வில்சன் பேட்டி
வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி நிருபர்களிடம் கூறுகையில், 1995ஆம் சட்டத் விதிகளின்படி ஒரு இஸ்லாமியர் தாமாக முன்வந்து விருப்பத்தோடு சொத்துக்களை வழங்கலாம். இஸ்லாமியர்களின் மரபின்படி சொத்துகளை தானமாக வழங்க முந்தைய சட்டம் வழிவகை செய்திருந்தது. ஆனால் தற்போது சட்ட திருத்தத்தின் காரணமாக இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

வாய் மொழியாக வழங்கப்பட்ட சொத்துகளில் பள்ளிகள் கல்லூரிகள் இயங்கி வருகின்றன, ஆனால் தற்போது சட்ட திருத்தத்தின் மூலம் உரிய ஆவணங்கள் இல்லாத சொத்து கள் அரசுக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. மனுதாரர்களின் வாதங்களின் அடிப்படையில் புதிய சட்ட திருத்தத்தின் சாராம்சங்களை உச்சநீதிமன்றம் இன்றைய இடைக்கால உத்தரவு மூலம் நிறுத்தி வைத்துள்ளது. இஸ்லாமிய மக்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்காகவே இந்த திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும், புதிய சட்ட திருத்தத்தின்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. வக்பு வாரிய திருத்த சட்டம் அமலில் இருக்கும் ஆனால் அதனை செயல்படுத்த முடியாது என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு” என்று கூறினார்.

The post மே 5 வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் வக்பு வாரியத்துக்கு புது உறுப்பினர் நியமிக்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு; ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க ஒரு வாரம் கெடு appeared first on Dinakaran.

Read Entire Article