மெல்லிய குரலால் மக்களின் மனதை கவர்ந்த பீகாரின் ‘நைட்டிங்கேல்’ பாடகி மறைவு: மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

1 week ago 4

பாட்னா: மெல்லிய குரலால் மக்களின் மனதைக் கவர்ந்த ‘பீகாரின் வானம்பாடி’ என்று அழைக்கப்படும் பாடகி சாரதா சின்ஹா நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த போஜ்புரி நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா (72), கடந்த சில நாட்களாக வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவால் குடும்பத்தினர் மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. தனது மெல்லிய குரலால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த சாரதா சின்ஹா மரணச் செய்தியை அவரது மகன் அன்ஷுமன் சின்ஹா ​​உறுதிப்படுத்தினார். தொடர்ந்து சாரதா சின்ஹாவின் உடல் டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சாரதாவுக்கு அஞ்சலி செலுத்த அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் குவிந்து வருகின்றனர்.

நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 1952ம் ஆண்டில் பீகாரின் சுபாலில் பிறந்த சாரதா சின்ஹா, தனது பெரும்பாலான பாடல்களை மைதிலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பாடினார். கடந்த 1991ல் அவருக்கு பத்ம விருதும், 2018ல் பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது. ‘பீகாரின் வானம்பாடி’ என்று அழைக்கப்படும் சாரதா, பாலிவுட் மற்றும் போஜ்புரி படங்களுக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மெல்லிய குரலால் மக்களின் மனதை கவர்ந்த பீகாரின் ‘நைட்டிங்கேல்’ பாடகி மறைவு: மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article