மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நிறைவு

3 months ago 24

சென்னை,

இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. சென்னை மெரினாவையொட்டிய காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு நேர் எதிரில் இந்த சாகச நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரைக்கு நேரில் வந்து விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை கண்டு களித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், தலைமை ஏர் மார்ஷல் ஏ.பி.சிங், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் நேரில் கண்டனர்.

பாராசூட் சாகசத்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. பயிற்சி பெற்ற ஆகாஷ் கங்கா குழுவினர் பாராசூட் மூலம் வானில் இருந்து குதித்து சாகசம் செய்தனர். அடுத்ததாக ஹெலிகாப்டர்களில் மெரினா கடற்கரையை வட்டமடித்தபடி வலம் வந்து பணயக் கைதிகளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் இறங்கி மீட்பதுபோல் வீரர்கள் சாகசம் செய்தனர். தொடர்ந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பிரமிப்படையச் செய்தனர்.

வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள் ஆகாயத்தில் இதயம் வரைந்து பார்வையாளர்களின் மனம் கவர்ந்தன. சி17 ரக விமானத்தின் மகாபலி சூர்யகிரண் அணிவகுப்பு (SKAT) மக்களை வியப்பில் ஆழ்த்தியது. சூரியனை நோக்கியபடி சீறிப்பாய்ந்த சூர்யகிரண் விமானங்கள் வானில் வட்டமடித்து சுழன்று வந்து மூவர்ண கொடியை வரைந்து சாகசத்தில் ஈடுபட்டன.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து மெரினாவில் இருந்து மக்கள் கிளம்பி வருகின்றனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் புறப்பட்ட நிலையில் பல இடங்களிலும் நெரிசல் காணப்படுகிறது. சென்னை செம்மொழி பூங்கா சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

Read Entire Article