சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், மெரினா வளைவு சாலையில் ரூ.15 கோடியில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆக.12-ம் தேதி திறந்துவைத்தார். இதில் 360 கடைகளும், மீன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் 84 இருசக்கர வாகனங்கள், 67 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மீன் அங்காடியின் வெளியே மெரினா வளைவு சாலை பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நவீன மீன் அங்காடி திறக்கப்பட்ட நிலையில், மெரினா வளைவு சாலையை, சாலையோர வியாபாரத்துக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மெரினா வளைவு சாலையில் மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்.19 முதல் நவீன மீன் அங்காடியில் மட்டுமே மீன்களை விற்க வேண்டும்.