மெரினா கடற்கரையில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி சென்னையில் 8ம் தேதி வரை விமானங்களின் நேரம் மாற்றம்: நேற்றே ஒன்றரை மணிநேரம் விமான நிலையம் மூடல்

3 months ago 18

சென்னை: மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி நடைபெற இருக்கும் “ஏர் ஷோ” நிகழ்ச்சிக்காக, இந்திய விமானப்படை விமானங்களின் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி, சென்னை விமான நிலையம் நேற்று பகல் 1.45 மணி முதல் மாலை 3.15 மணி வரை ஒன்றரை மணி நேரம் மூடப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள், சென்னையில் வந்து தரை இறங்கும் 10 விமானங்கள் என மொத்தம் 25 விமானங்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன.

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை தினத்தை ஒட்டி, வரும் 6ம் தேதி (ஞாயிறு) காலை 11 மணியிலிருந்து பகல் ஒரு மணி வரையில், இந்திய விமானப்படை விமானங்களின் வீர சாகச நிகழ்ச்சிகள், ஏர்ஷோ பொதுமக்களின் பார்வைக்காக நடத்தப்பட உள்ளன. இதற்காக, நேற்று முதல் விமானப்படை வீர சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை வரும் 8ம் தேதி வரை மெரினா கடற்கரை மற்றும் தாம்பரம் விமானப்படை தளம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

அந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறங்குவது, விமானப்படை சாகசங்கள் செய்யும் விமானங்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கருதப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் வரும் 8ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரையில் 15 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரையில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, சென்னை விமான நிலையமும் தற்காலிகமாக அந்த நேரங்களில் மூடப்படுகிறது.

முதல் நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) பகல் 1.45 மணி முதல் மாலை 3.15 மணி வரையில் சென்னை விமான நிலையம் மூடப்பட்டு, விமான சேவைகளின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று பகல் 1.45 மணியிலிருந்து மாலை 3.15 மணி வரையில் 15 விமானங்கள் புறப்பட்டு செல்லும். அதில் சிங்கப்பூர், டாக்கா, யாழ்ப்பாணம் ஆகிய 3 சர்வதேச விமானங்களும், 12 உள்நாட்டு விமானங்களும் அடங்கும்.

அந்த விமானங்கள் அனைத்தும் நேற்று மாலை 3.20 மணிக்கு மேல், புறப்பட்டுச் செல்லும் வகையில் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அதேபோல், நேற்று பகல் 1.45 மணியிலிருந்து மாலை 3.15 மணி வரையில் சென்னைக்கு வந்து தரையிறங்க வேண்டிய விமானங்களான யாழ்ப்பாணம், கொழும்பு, அபுதாபி, டாக்கா, சீரடி, மதுரை, டெல்லி உள்ளிட்ட 10 விமானங்களின் நேரம் மாலை 3.15 மணிக்கு மேல், சென்னையில் வந்து தரை இறங்குவது போல் மாற்றி அமைக்கப்பட்டன. அதோடு விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு, நேற்று முன்தினம் இரவில் இருந்தே குறுந்தகவல்கள் அனுப்பி, விமான நேரங்கள் மாற்றங்கள் குறித்து தெரிவித்ததால், பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

The post மெரினா கடற்கரையில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி சென்னையில் 8ம் தேதி வரை விமானங்களின் நேரம் மாற்றம்: நேற்றே ஒன்றரை மணிநேரம் விமான நிலையம் மூடல் appeared first on Dinakaran.

Read Entire Article