சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மெரினா கடற்கரையில் 1942ல் இரண்டாம் உலகப்போரின் போது நீச்சல் குளம் நிறுவப்பட்டது. பின் 1947ல் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு 77 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளம் ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த மாதம் 8ம்தேதி திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் நீச்சல் குளத்தில் ஏற்கனவே உள்ள நீர் வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சிக்கான வசதிகள் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த வசதிகள் தற்போதைய நிலையில், மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பேரில் நவீன வசதிகளுடன் கூடிய நீர் வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சி அமைப்பை ஏற்படுத்த சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், ரூ.3 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் இந்நீச்சல் குளத்தில் 4.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சி அமைப்பினை நிறுவிய பின்னர் 5 ஆண்டுகளுக்கு இயக்கி பராமரிக்கும் பணிகள் சென்னை குடிநீர் வாரியத்தால் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post மெரினா கடற்கரையில் நீச்சல் குளத்தில் ரூ.3.41 கோடியில் புதியநீர் வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சி அமைப்பு : சென்னை குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.