
சென்னை
சென்னை மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் ஒரு பெண், ஒரு ஆணுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் அவர்களிடம் சென்று 'நீங்கள் கணவன்- மனைவியா?' என கேட்டு விசாரணை நடத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் போலீஸ்காரருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தனது செல்போனில் போலீஸ்காரரை வீடியோ எடுத்த அவர், நீங்கள் எப்படி எங்களை பார்த்து கணவன்-மனைவியா என்று கேட்கலாம்? மெரினா கடற்கரையில் கணவன்-மனைவி மட்டும்தான் அமர்ந்து பேச வேண்டுமா? வேறு யாரும் உட்கார்ந்து பேசக் கூடாதா? உங்களை இப்படி கேட்க சொல்லியுள்ளார்களா? என சரமாரியாக கேள்விகளை அடுக்கினார்.
இதற்கு பதிலளித்த போலீஸ்காரர், இருட்டில் தனியாக இருந்தால் விசாரணை நடத்துவது வழக்கமான ஒன்றுதான் என்றார்.
இந்த உரையாடல் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட காவலரை பணியிடமாற்றம் செய்ய காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.