மெரினா கடற்கரை லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் அங்காடியில் மட்டுமே நாளை முதல் மீன் விற்பனை: சென்னை மாநகராட்சி

4 weeks ago 7


சென்னை: மெரினா லூப் சாலையில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியில் மட்டுமே நாளை காலை முதல் மீன் வியாபாரிகள் மீன் விற்பனை செய்திட வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், மெரினா லூப் சாலையில் ரூ.14.93 கோடி மதிப்பில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டு, முதலமைச்சரால் கடந்த 12.08.2024 ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. 2 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன மீன் அங்காடியில் 360 கடைகளும், மீன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தும் வகையில் 84 எண்ணிக்கையிலான இருசக்கர வாகனங்கள், 67 எண்ணிக்கையிலான நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வாகன நிறுத்த வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 40 கே.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மீன் வெட்டுவதற்கான தனி இடம், குடிநீர் வசதி கழிப்பிட வசதி மற்றும் மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளன மேலும், நவீன மீன் அங்காடியின் வெளியில் லூப் சாலையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீன் அங்காடியின் வெளியே லூப் சாலை பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நவீன மீன் அங்காடியின் உள்ளேயும். வெளியேயும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு எவ்வித வாகன கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.

மீன் அங்காடியின் வெளியே லூப் சாலை பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நவீன மீன் அங்காடியின் உள்ளேயும், வெளியேயும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு எவ்வித வாகன கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. உயர்நீதிமன்றம் லூப் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மீனவர்களின் கடைகளை அகற்றுவது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்தது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சி மற்றும் மீன் வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் இணைந்து லூப் சாலையில் மீன் விற்பனை செய்பவர்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, மெரினா லூப் சாலையில் உள்ள நவீன மீன் அங்காடியில் நொச்சிக் குப்பம். நொச்சி நகர் மற்றும் டுமில் குப்பம் பகுதிகளைச் சார்ந்த மீன் விற்பனை செய்பவர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் மீன் விற்பனை செய்பவர்களின் பெரும்பாலானவர்கள் இந்த அங்காடியில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிகளைச் சார்ந்த ஒரு சிலர் லூப் சாலையில் மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மெரினா லூப் சாலையில் மேற்கண்ட பகுதிகளைச் சார்ந்த மீன் விற்பனை செய்வர்கள் நாளை காலை முதல் மெரினா லூப் சாலையில் கட்டப்பட்டுள்ள இந்த நவீன மீன் அங்காடியில் மட்டுமே மீன்களை விற்பனை செய்திட வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பகுதியில் மீன்கள் வாங்கிட வருகைதரும் பொதுமக்களும் லூப் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன மீன் அங்காடி வளாகத்திற்குள் மட்டுமே மீன்களை வாங்கிட வேண்டும்.

மீன் விற்பனையாளர்களும், பொதுமக்களும் வாகனங்களை கட்டணமின்றி நிறுத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்திட வேண்டும். இதனைக் கண்காணித்திட சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல் துறைகளின் அலுவலர்கள் கொண்ட சிறப்புக் குழு அமைத்து, தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், இப்பகுதியில் புறக்காவல் நிலையம் ஒன்றும் அமைக்கப்படும். மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்கு மீன் விற்பனை செய்பவர்கள் மற்றும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

The post மெரினா கடற்கரை லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் அங்காடியில் மட்டுமே நாளை முதல் மீன் விற்பனை: சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Read Entire Article