மெட்ரோ ரெயில் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டின்படி நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

5 days ago 5

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக போக்குவரத்து தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கான தொழில்நுட்ப பணியாளர்கள் நியமனம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை என்பதும், கொத்தடிமைகளைப் போல குறைந்த ஊதியத்திற்கு பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதும் அதிர்ச்சியளிக்கிறது. சமூகநீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு துணைபோவது கண்டிக்கத்தக்கது.

சென்னை மெட்ரோ ரெயிலின் இரண்டாம் கட்ட போக்குவரத்தை இயக்கி,பராமரிப்பதற்கான ஒப்பந்தம் டெல்லி மெட்ரோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் செய்யப்படும் நியமனங்கள் எதுவும் நிரந்தரமானவை அல்ல. 3 ஆண்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.26,660 மட்டுமே வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்படுவதில்லை.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், குறைந்த அளவிலான நியமனங்களாவது நிரந்தர அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை செயல்படுத்தாத தமிழக அரசு, மெட்ரோ ரெயில் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில், இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை நியமிப்பதை ஊக்குவித்து வருகிறது.

மெட்ரோ ரெயில்களை இயக்குவதும், பராமரிப்பதும் மிகவும் நுணுக்கனான பணிகள். இந்தப் பணிகளுக்கு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் படித்து பட்டயம் பெற்ற இளைஞர்கள்தான் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.886 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இது தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட மிகவும் குறைவு ஆகும். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சமூகநீதியா? என்பதை முதல்-அமைச்சர்தான் விளக்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்று தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்சம் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஏற்படுத்தப்பட்ட மெட்ரோ ரெயில் பணிகளையாவது இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி நிரந்தர அடிப்படையில் நிரப்பலாம். அதைக் கூட செய்ய முடியாது தி.மு.க. சமூக நீதி என்ற சொல்லை உச்சரிப்பதற்கான தகுதியை இழந்து விட்டது.

தி.மு.க. அரசு இனியாவது திருந்த வேண்டும். மெட்ரோ ரெயில் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்றி , நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article