
பெங்களூரு,
பெங்களூருவில் மெட்ரோ ரெயில் நிலையம், மெட்ரோ ரெயிலில் செல்போனில் வீடியோ, புகைப்படம் எடுக்கக்கூடாது. உணவு சாப்பிடக்கூடாது. மதுபானங்கள், பீடி, சிகரெட், புகையிலைப்பொருட்களை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் (பி.எம்.ஆர்.சி.எல்) அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த 26-ந் தேதி மாதவராவில் இருந்து மாகடி ரோட்டுக்கு வந்த மெட்ரோ ரெயிலில் பயணித்த பெண் ஒருவர், உணவு சாப்பிட்டுள்ளார்.
இதை ரெயிலில் பயணித்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் தொடர்பான சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதை கவனத்தில் எடுத்து கொண்ட மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் அந்த பெண்ணை அடையாளம் கண்டு, அவருக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். தற்போது இது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.