மெட்ரோ 2-வது கட்டப் பணிகள்: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம்

1 month ago 14

சென்னை,

சென்னை மெட்ரோ கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்குவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது;

கடந்த 10 ஆண்டுகளில் நமது நாடு உள்கட்டமைப்பு வசதிகளில் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன. இது மக்களுக்கு மிகவும் சவுகரியமாக மற்றும் வசதியாக உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு முன்மாதிரியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சென்னையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் மகத்தான பயனை அளிக்கப் போகின்றன.

இதனை கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அடிக்கல் நாட்டினார். ஆனால் மத்திய அரசின் நிதி ஒப்புதல் பெறுவதற்கு முன்பே, தங்களின் திட்டமாக கருதி கொண்டு மாநில அரசு தொடங்கியது. இந்த திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. ஆனால் போதிய நிதியில்லாமல் பணிகள் முடங்கி கிடப்பதுடன், சாலை போக்குவரத்துக்கு தடையாகவும் உள்ளது.

தற்போது மூன்றில் ஒருபங்கு பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. அதற்குள் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேலும், சென்னை மெட்ரோ ரெயிலின் இரண்டாம் கட்ட திட்டம் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு பெரிதும் வரப்பிரசாதமாக இருக்கும். இதில் தி.மு.க. அரசு தேவையின்றி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது. தமிழகத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக உள்ளது என்பதை வெளிப்படுத்த திமுக அரசு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது.

மத்திய அரசிடம் இருந்து தமிழகம் 10 ஆண்டுகளாக பலன்களை பெற்று வருகிறது. கோடிக்கணக்கானோர் பயனடைந்த எண்ணற்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், துவக்கி வைக்கவும் பிரதமர் மேற்கொண்ட வருகைகளே அதற்கு சாட்சி. உங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து உதவிகளை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு இணைந்தால் மட்டுமே மெட்ரோ திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பது இப்போது தெளிவாகிறது.

திட்டப்பணிகள் நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள கணிசமான தாமதத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம். சென்னை மெட்ரோ திட்டத்திற்கு 50 சதவீத நிதியை விடுவிக்க வேண்டும்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.  

Read Entire Article