*மன்னிப்பு கடிதத்துடன் அலைந்த வாலிபர் சிக்கினார்
வேடசந்தூர் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பழனியப்பன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர். மனைவி சிவானந்தம் (68). கடந்த மார்ச் 16ம் தேதி காலை பழனியப்பன் நடைபயிற்சி சென்றபோது, வீட்டில் அவரது மனைவி மட்டும் தனியாக இருந்தார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி சிவானந்தம் அணிந்திருந்த ஒன்றே கால் பவுன் தங்கச்செயினை பறித்துள்ளார்.
அப்போது காதில் அணிந்திருந்த கம்மல் செயினில் சிக்கியதால், சிவானந்தத்தின் காது அறுந்தது. செயினும் பாதியாக அறுந்தது.இதையடுத்து அறுந்த தங்கச்செயினுடன் டூவீலரில் வாலிபர் தப்பி சென்றார்.
தகவலறிந்து வந்த வேடசந்தூர் போலீசார், காயமடைந்த சிவானந்தத்தை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தனிப்படை போலீசார் சிவானந்தம் வீட்டுப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில், செயினை பறித்து சென்றது வேடசந்தூர் அருகே குஞ்சுவீரன்பட்டியை சேர்ந்த சக்திவேல் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.
விசாரணையில், சக்திவேல் டிப்ளமோ முடித்துவிட்டு, வேடசந்தூர் அருகேயுள்ள நூற்பாலையில் வேலை பார்த்ததும், கடன் தொல்லை, குடும்ப கஷ்டம் காரணமாக முதன்முறையாக செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மூதாட்டியிடம் தங்கச்செயின் பறித்த குற்ற உணர்ச்சி தாங்காமல், ‘‘சாரி மேடம்… பைனான்ஸ் பிரச்னை… அதான் உங்க நகையை பறிச்சுட்டேன்’’ என மன்னிப்பு கடிதம் எழுதி கொடுப்பதற்காக வைத்துள்ளார்.
நகை பறிப்பின்போது, மூதாட்டி சத்தம் போட்டதும் அவசரத்தில் கடிதத்தை கொடுக்காமல் தப்பிச் சென்றது தெரிய வந்தது. சக்திவேலிடம் இருந்த இந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் போலீசார், சக்திவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post மூதாட்டியிடம் வீடு புகுந்து நகை பறிப்பு ‘ஸாரி மேடம்… பைனான்ஸ் பிரச்னை அதான் உங்க செயினை பறிச்சுட்டேன்’ appeared first on Dinakaran.