மூதாட்டி வீட்டில் நூதன முறையில் நகை திருடிய வாலிபர் கைது

1 month ago 7

*ரூ.8 லட்சம் நகை பறிமுதல் மேலும் ஒருவருக்கு வலை

சிதம்பரம் : மூதாட்டி வீட்டில் நூதன முறையில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் லலிதா கார்டன் தில்லைநாயகபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி மங்கையர்கரசி(65).

இவர் கடந்த மாதம் 14ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது,பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், வீட்டில் தனியாக இருந்த மங்கையர்கரசியிடம், நாங்கள் நகராட்சியில் இருந்து வருகிறோம். உங்கள் வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் கொள்ளளவு எவ்வளவு உள்ளது என்று பார்க்க வேண்டும். மாடிக்கு வாருங்கள் என்று கூறியுள்ளனர். இதை தொடர்ந்து மர்ம நபரில் ஒருவர் மங்கையர்கரசியை மாடிக்கு அழைத்து சென்று குடிநீர் தொட்டியை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது மற்றொரு நபர், வீட்டினுள் நுழைந்து பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை திருடியுள்ளார். இதையடுத்து 2 நபர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதை தொடர்ந்து வீட்டுக்குள் வந்த மங்கையர்கரசி, பீரோவை பார்த்த போது, பீரோவில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மங்கையர்கரசி, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவின் பேரில் ,சிதம்பரம் டிஎஸ்பி அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மேற்பார்வையில், சிதம்பரம் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாபு, கோபி, உள்ளிட்ட போலீசார் மூலம் தனிப்படை அமைக்கப்பட்டு, சிதம்பரம் நகர பகுதியில் பல்வேறு இடங்களிலும் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் வேலூர் மாவட்டம் சங்கராபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அண்ணாமலை மகன் முத்து(29) என்பவர் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து முத்துவை கைது செய்தனர். அவர் மூதாட்டி வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 13 பவுன் தங்க நகைகள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் முத்துவுடன் சேர்ந்து திருடி தலைமறைவாக உள்ள ரவி என்பவரை தேடி வருகின்றனர்.

The post மூதாட்டி வீட்டில் நூதன முறையில் நகை திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article