மூணாறு: மூணாறு மலைச்சாலைகளில் ஆபத்தை உணராமலும், விதிகளை மீறியும் கார்களிலும், பைக் உள்ளிட்ட டூவீலர்களிலும் தொங்கியவாறும், ஏறி நின்றும் ரீல்ஸ் மற்றும் கெத்துக்காக சாகசப் பயணம் செய்யும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். கேரளா மாநிலத்தில், தமிழ்நாட்டை ஒட்டிய பகுதிகளில் பிரபலமான சுற்றுலா தலமாக மூணாறு உள்ளது. மேலும் மூணாறு அருகிலும் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.
ஆனால் இந்தப் பகுதிகளுக்கு செல்ல குறுகிய மலைப் பாதையில் பயணிக்க வேண்டும். இந்த நிலையில், இந்த சாலைகளில் கார்கள், டூவீலர்களில் செல்லும் சில இளைஞர்கள் ரீல்ஸ் மற்றும் கெத்துக்காக சாகச பயணங்களில் ஈடுபடுகின்றனர். தங்களுக்கு உள்ள ஆபத்தை உணராமலும், எதிர் திசையில் மற்றும் பின்னால் வரும் வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் அவர்கள் கார்களில் தொங்கிக் கொண்டும், கார் கதவுப் பகுதியில் உடலை வெளியே நீட்டியபடியும், மேற்கூரையில் ஏறி நின்றும், டூவீலர்களின் மீது ஏறி நின்றும் கூச்சலிட்டபடி செல்கின்றனர்.
இதனால் பிற வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையாக செல்ல வேண்டியுள்ளது. ஏற்கனவே இத்தகைய விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்ததால் சாகசப் பயணங்கள் குறைந்திருந்தது. இந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் இளசுகள் சாகசப் பயணம் செய்வதை காண முடிகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு மூணாறுக்கு சுற்றுலா வந்த இளைஞர்கள் டாப் ஸ்டேஷன் அருகே உள்ள மலைச்சாலையில் காரின் கதவில் இருந்து உடலை வெளியே நீட்டியபடி ஆபத்தான முறையில் சாகசமாக பயணம் செய்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலதரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடைபெறுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள மோட்டார் வாகன துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post மூணாறு மலைச்சாலைகளில் ரீல்ஸ், கெத்துக்காக இளசுகள் பைக், காரில் சாகசப் பயணம்: கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.