மூணாறு அருகே பண்ணையில் கொத்து, கொத்தாக இறந்து கிடந்த கோழிகள்: வனத்துறை விசாரணை

23 hours ago 2


மூணாறு: மூணாறு அருகே, பண்ணையில் கொத்து, கொத்தாக 1,000 கோழிகள் வரை இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்மவிலங்குகள் தாக்கியதா அல்லது தீவனத்தில் எதுவும் விஷம் கலந்ததா என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே உள்ள ராஜாக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரன். இவர், தனது வீடு அருகே கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் 2,000க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோழிகளுக்கு வழக்கம்போல தீவனம் வைத்துவிட்டு வீட்டிற்கு தூங்கச் சென்றார்.

நேற்று காலை வந்து பார்த்தபோது பண்ணையில் 1,000 கோழிவரை கொத்து, கொத்தாக இறந்து கிடந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நரேந்திரன் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் தீவனத்தில் விஷம் எதுவும் கலந்ததா அல்லது மர்மவிலங்குகள் எதுவும் தாக்கியதா என விசாரணை நடத்தினர். மேலும், விலங்குகளின் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். இதில், பூனைகள் அல்லது கீரிகள் கூட்டமாக வந்து கோழிகளை கொன்று இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. 1000க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்ததால் உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

The post மூணாறு அருகே பண்ணையில் கொத்து, கொத்தாக இறந்து கிடந்த கோழிகள்: வனத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article