
மூணாறு,
சென்னை ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 பேர் நேற்று முன்தினம் மூணாறுக்கு ஒரு காரில் சுற்றுலா வந்தனர். அவர்கள் மூணாறை அடுத்த போதமேடு என்ற பகுதியில் ஒரு தங்கும் விடுதியில் அறைகள் எடுத்து தங்கினர். நேற்று காலை 8 மணி அளவில் மூணாறில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் செல்வதற்கு ஜீப் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜீப்பை மூணாறு அடுத்துள்ள பள்ளிவாசல் ஆற்றுக்காடு பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (வயது 40) என்பவர் ஓட்டினார். ஜீப்பில் சென்னையைச் சேர்ந்த பயணிகள் 10 பேரும் ஏறினர். விடுதியில் இருந்து புறப்படுவதற்கு முன்பு டிரைவர் அஸ்வின் ஜீப்பை பின் நோக்கி நகர்த்தினார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த தேயிலை தோட்டத்தில் சுமார் 50 அடி பள்ளத்தில் ஜீப் பாய்ந்தது. ஜீப்பில் இருந்த சுற்றுலா பயணிகள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர்.
இந்த விபத்தில் சென்னை ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (51) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் அஸ்வின், ஜீப்பில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மூணாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவலறிந்த மூணாறு போலீசார் அங்கு விரைந்து வந்து பிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடிமாலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.