
சென்னை,
2020ம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளார். படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர். படத்தின் தொடக்க பூஜை விழாவை பெரியளவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் மார்ச் 6ம் தேதி பூஜை விழா சென்னையில் நடைப்பெற இருக்கிறது. திரைப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகவுள்ளது. படத்தின் செட் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சுந்தர் சி இயக்கத்தில் அண்மையில் வெளியான மத கஜ ராஜா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து வடிவேலு நடிப்பில் கேங்கர்ஸ் திரைப்படம் வெளிவர இருக்கிறது.

'மூக்குத்தி அம்மன் 2' பட பூஜை வரும் 6ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை தேதி அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.