சென்னை: முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றி களப்பணியைத் தொடர்ந்திடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. சென்னையில் தேங்கிய மழைநீர் போர்க்கால அடிப்படையில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வடசென்னை பகுதியில் யானைக்கவுனி, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் சாலை மற்றும் தெருக்களில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து, மழை நின்று ஒரு சில மணி நேரத்தில் மழை நீர் அகற்றப்பட்டது. இன்று இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த நிலையில் 2வது நாளாக இன்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
இந்நிலையில் முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரை பணி தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; கனமழை குறித்த ‘அலெர்ட்’ பெறப்பட்டவுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பொதுமக்களின் ஒத்துழைப்போடு எதிர்கொண்டோம். பெரும்பாலான இடங்களின் மழைநீர் தேங்காமல் சரிசெய்யப்பட்டுள்ளது. முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரை பணி தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.