*இடைத்தரகர்கள் தலையீட்டால் விவசாயிகள் அவதி
ஓசூர் : ஓசூர் சர்வதேச மலர் ஏல மையம் முழு வீச்சில் செயல்படாததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, பேரிகை பகுதிகளில், மலர் சாகுபடிக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை உள்ளதால், விவசாயிகள் அதிக அளவில் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் ஆண்டுக்கு 45 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு, கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆங்கில புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் காதலர் தினம் போன்ற நாட்களில் இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் கொய்மலர்கள், வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காதலர்களுக்கு பிடித்த சிகப்பு ரோஜா உட்பட 30 வகையான ரோஜா மலர்கள், ஓசூர் பகுதியில் விளைவிக்கப்படுகின்றன.
இங்கு விளைவிக்கப்படும் ரோஜா மலர்கள், 2 நாள்கள் குளிர்சாதன அறைகளில் வைத்து பதப்படுத்தி, இடைத்தரகர்களால் குளிர்சாதன லாரிகள் மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்படுகின்றன. பின்னர் விமானத்தில் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதுதவிர, நாட்டின் பிற பகுதிகளுக்கும் இந்த மலர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் மலர் விவசாயிகள் பெரும் தொகையை, இடைதரகர்களுக்கு வழங்க வேண்டிய நிலை இருந்தது.
இதையடுத்து மலர் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, கடந்த ஆட்சி காலத்தில், ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பேரண்டப்பள்ளி அருகே ரூ.20.2 கோடி செலவில் சர்வதேச ஏல மையம் கட்டுவதற்கான கட்டுமான பணி நடைபெற்றது.
இதில் 2,000 டன் சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, ஏல மையம், தரம் பிரிப்பு கூடம், 16 கடைகள், கூட்டரங்கம், பயிற்சி அரங்கம் ஆகிய நவீன வசதிகளுடன் 7.63 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு 2021ம் ஆண்டு பணிகள் நிறைவடைந்தன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம், இந்த ஏல மையத்தை திறந்து வைத்தார். இந்த மலர் ஏல மையம் மூலம், விவசாயிகள் தங்களது கொய்மலர்களை குளிர்பதன கிடங்குகளில் சேமித்து, வெளிநாடுகளுக்கு ஆன்லைன் மூலம் விற்பனை செய்து, லாபம் ஈட்டும் சூழல் உருவாகும் என விவசாயிகள் நினைத்தனர்.
ஆனால், அவர்களுக்கு அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை, 3 ஆண்டுகளை கடந்தும், சர்வதேச மலர் ஏல மையம், முழுவீச்சில் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் விவசாயிகள் இடைத்தரகர்களிடம் தங்களது லாபத்தை இழக்கின்றனர். ஏல மையம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்தால் மட்டுமே, உரிய லாபத்தை பெற முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விவசாயி ஹரிஷ் என்பவர் கூறுகையில், ‘ஓசூரில் கட்டப்பட்டுள்ள சர்வதேச ஏல மையம் முழுமையான செயல்பட்டால் மட்டுமே, விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். இடைத்தரகர்களுக்கு 30 முதல் 40 சதவீதம் வரை கொடுக்க வேண்டியுள்ளதால், விவசாயிகளுக்கு நஷ்டம் தான் மிஞ்சுகிறது.
அரசு மானியத்துடன் ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.50 லட்சம் செலவில் பசுமை குடில்கள் அமைத்து கூலியாட்கள், மருந்து, செடிகளை பக்குவப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டு, மலர் உற்பத்தி செய்வதால் அதில் பெரும் லாபம் கிடைப்பதில்லை.
இடைத்தரகர்களுக்கு 30 முதல் 40 சதவீதம் செல்வதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, உடனடியாக தமிழக அரசு பன்னாட்டு ஏலம் மையத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது,’ என்றார்.
The post முழுமையாக செயல்படாத ஓசூர் சர்வதேச மலர் ஏல மையம் appeared first on Dinakaran.