சென்னை : “முழுக்க முழுக்க மக்கள் பிரச்னைகளுக்காக மட்டுமே அமித்ஷாவை சந்தித்தோம்” என்று டெல்லியில் அமித் ஷா உடனான சந்திப்பு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழ்நாட்டு பிரச்சனைகள் குறித்து ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுடன் பேசினேன். தமிழ்நாட்டுக்கான நிதியை உடனே விடுவிக்க அமித் ஷாவிடம் வலியுறுத்தினேன். 100 நாள் வேலை திட்டம், கல்வி நிதி ஆகியவற்றை ஒன்றிய அரசு உடனே வழங்க கோரினேன். கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த அமித் ஷாவிடம் வலியுறுத்தப்பட்டது.
இருமொழிக் கொள்கை தொடர அனுமதிக்க வேண்டும் என அமித் ஷாவிடம் வலியுறுத்தினோம். காவிரியில் கர்நாடகா அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு துணை நிற்கக் கூடாது என வலியுறுத்தினோம். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த அணையை பலப்படுத்த வேண்டும்.முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த கேரளா இடையூறாக இருக்கக்கூடாது. முழுக்க முழுக்க மக்கள் பிரச்சனைக்காக மட்டுமே அமித் ஷாவை சந்தித்தேன். தமிழ்நாட்டுக்கு தேவையான உதவிகளை செய்வதாக அமித் ஷா உறுதி அளித்துள்ளார்,”இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டணி குறித்து அமித் ஷாவுடன் பேசினீர்களா என்று கேட்டதற்கு மக்கள் பிரச்சனை பற்றி மட்டுமே பேசியதாக எடப்பாடி பதில் அளித்தார். அதில், “கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாறும். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி இறுதி செய்யப்படும். கூட்டணி குறித்து முடிவு எடுக்க இன்னும் காலம் இருக்கிறது,”இவ்வாறு தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக எடப்பாடி மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post முழுக்க முழுக்க மக்கள் பிரச்னைகளுக்காக மட்டுமே அமித்ஷாவை சந்தித்தோம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் appeared first on Dinakaran.