முழுக் கதையும் அறியாமல் முடிவெடுக்காதீர்கள்

11 hours ago 3

ஆன்மிகத்தின் உயர்ந்த நிலை ஒரு விஷயத்தை சாட்சியாக நின்று பார்ப்பதோடு நின்று விடுதல். அப்படி நின்று விடும் பொழுது அந்த விஷயத்தின் தாக்கங்கள் அவரிடத்தில் நிகழாது. அடித்த புயல் ஓய்ந்த பின்னும் அசையாமல் நிற்கும் பாறை போல அவர் கால ஓட்டத்தின் எந்த நிகழ்வுகளிலும் பாதிக்காமல் நிலைத்து நிற்பார். இதற்குத்தான் “ஸ்திர பிரக்ஜன்’’ என்று பெயர். ஒரு விஷயம் நடந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி நடந்து எப்படிப் பட்ட விளைவுகளை எல்லாம் தரும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த விளைவு நிகழாத பொழுது நமக்குச் சங்கடமாகிறது. அதனால் மனம் பாதிப்படைகிறது. ஒன்று நிகழும் பொழுது இந்த காரியம் நமக்கு நன்மை செய்யும் என்று நம்புகிறோம். அந்தக் காரியம் எதிர்பாராமல் நமக்கு அனர்த்தமாக முடியும் பொழுது மிகவும் பாதிப்படை கிறோம். இன்னும் சில காரியங்கள் நம்மை மிகவும் பாதிக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் அந்தக் காரியம் எதிர்பாராத நன்மையைச் செய்கின்ற பொழுது நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

``நடக்கும் என்பார் நடக்காது
நடக்காது என்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காது என்பார் கிடைத்து விடும்’’

என்று ஒரு திரைப்பாடலின் பல்லவி இந்த விஷயத்தை நமக்கு பட்டவர்த் தனமாக உணர்த்தும். இந்த விஷயத்தில் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளின் ஆன்மிகச் சிந்தனை ஒரே மாதிரியாக இருக்கிறது. உதாரணமாக, இந்தக் கதையை கவனித்தால் புரியும். இது சீனாவில் லாவோட்சு வாழ்ந்த காலங்களில் நிகழ்ந்தது. இந்த கதையை லாவோட்சு மிகவும் விரும்பினார். லாவோட்சுவை பின்பற்றியவர்கள் பல தலைமுறையாக இந்த கதையை திரும்ப திரும்ப கூறி வந்தனர். இந்த கதையில் மேலும் மேலும் அதிக அர்த்தத்தை அவர்கள் உணர்ந்தனர். இந்த கதை தொடர்ந்து வந்தது. இது ஒரு வாழும் உண்மையென மாறிவிட்டது. கதை மிகவும் எளிமையானது. ஒரு கிராமத்தில் வயதான ஏழை ஒருவன் இருந்தான். விறகுவெட்டி. அழகான வெண் குதிரை ஒன்று அவனிடம் இருந்தது. அரசன் அந்த குதிரையை வாங்கத் தயாராக இருந்தான். ஆனால் அந்த மனிதன், “இந்த குதிரை என்னை பொருத்த வரை வெறும் குதிரையல்ல, என் குடும்பத்தில் ஒருவன்.

நான் எப்படி மனிதர்களை விற்கமுடியும்? அவன் ஒரு நண்பன். அவன் ஒரு உடமையல்ல, உன்னால் நண்பனை விற்க முடியுமா? அது சாத்தியமில்லை.” என்றுகூறி விட்டான். ஒருநாள் காலை லாயத்தில் இருந்த குதிரை காணாமல் போய்விட்டது. முழு கிராமமும் ஒன்று திரண்டு, “நீ ஒரு முட்டாள் கிழவன். இப்படி நடக்குமென்று என எங்களுக்கு முன்பே தெரியும். அரசர் கேட்டபோதே விற்றிருக்கலாம். நல்ல விலை கிடைத்திருக்கும். ம்.. உனக்கு இது ஒரு கெட்டநேரம்,’’ என்றனர். அந்தக் கிழவன், “அதிகம் பேச வேண்டாம் – குதிரை காணவில்லை என்று மட்டும் கூறுங்கள். இதுதான் உண்மை. மற்ற அனைத்தும் அனுமானங்களே. இது அதிர்ஷ்டமா இல்லையா என்பது யாருக்குத் தெரியும்?” என்றான்.மக்கள், “எங்களை முட்டாளாக்காதே. நாங்கள் சிறந்த தத்துவவாதிகளல்ல, ஆனால் இதற்குத் தத்துவம் எதுவும் தேவையில்லை. அரிதான ஒன்று காணாமல் போய்விட்டது. அது கெட்டநேரம் என்பது மிக சாதாரண உண்மை.” என்று திட்டிவிட்டுப் போய்விட்டனர்.

கிழவனுக்குப் புத்தி பிசகிவிட்டதென அவர்கள் நினைத்தனர். அந்தக் கிழவன் அமைதியாக இருந்தான். விறகுவெட்டியாகவே வாழ்ந்து வந்தான். வறுமையிலும் வேதனையிலும் வாடிக் கொண்டிருந்தான். சில நாட்களுக்கு பிறகு, திடீரென ஒரு இரவில் அந்தக் குதிரை திரும்பி வந்துவிட்டது. இப்போது அந்தக் குதிரை காட்டிலிருந்து தன் இனத்தைச் சேர்ந்த ஒரு டஜன் குதிரைகளையும் கூட்டிக் கொண்டு வந்தது.இதை கண்ட கிராமத்து மக்கள், “பெரியவரே, நீங்கள் சொன்னது சரிதான், நாங்கள் கூறியது தவறாகிவிட்டது. அது கெட்டநேரமல்ல. அது நல்லநேரம்தான்” என்றனர்.அந்த கிழவன், “மறுபடியும் நீங்கள் அதிகமாக யோசிக்கிறீர்கள். குதிரை திரும்ப வந்துவிட்டது. இன்னும் பனிரெண்டு குதிரைகள் வந்துள்ளன என்று மட்டும் கூறுங்கள். முழு கதையும் தெரியாமல் அதிர்ஷ்டமா சாபமா என்று முடிவு செய்யாதீர்கள். இது ஒரு நிகழ்வின் ஒரு பகுதியே. நீங்கள் முழு வாழ்வையும் பற்றி முடிவெடுக்கிறீர்கள். முடிவெடுக்காமல் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்றான்.இந்த முறை மக்கள் எதுவும் கூறவில்லை. அந்தப் பெரியவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான்.

அவன் குதிரைகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான். ஒரு நாள் குதிரை மேலிருந்து விழுந்து அவனது கால் எலும்பு முறிந்துவிட்டது. மக்கள் திரும்பவும்கூடி “12 குதிரைகளுடன் வந்தது லாபம் என்று நினைத்தோம். ஆனால் இது சாபம் போல் இருக்கிறது. ஒரே மகன் தனது கால்களை இழந்துவிட்டான். வயதான காலத்தில் அவன்தான் உனக்கு ஒரே ஆதரவு” என்றனர். அந்த வயதானவன், “வெகுதூரம் நினைப்பை ஓடவிட வேண்டாம். எனது மகன் கால்களை ஒடித்துக் கொண்டான் என மட்டும் கூறுங்கள். இது ஒரு சாபமா வரமா என யாருக்குத் தெரியும்” என்றான். சில வாரங்களுக்குப் பின், இந்த நாடு பக்கத்து நாட்டுடன் சண்டையிடச் சென்றது. வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் படையில் சேர வேண்டும் என்று அரசன் தண்டோரா போட்டான். பெரியவரின் மகனை, கால் ஒடிந்தவன் எப்படிச் சண்டை போட முடியும் என்று விட்டுவிட்டனர். ஊர் மக்கள் அழுது அரற்றினர்.

அவர்கள் அந்த வயதானவனிடம் வந்து, “நீ சொன்னது சரியே பெரியவரே! இது வரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. உனது மகன் கால்களை இழந்து இருக்கலாம், ஆயினும் குறைந்தபட்சம் இவன் உயிருடன் உன்னோடு இருப்பான், மெது மெதுவாக நடக்கக் கூட ஆரம்பிக்கலாம்” என்றனர்.அந்த வயதானவன், “உங்களுடன் பேசவே முடியாது. நீங்கள் மேன்மேலும் கற்பனை செய்துகொண்டே போகிறீர்கள். முடிவெடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். உங்களது மகன்கள் வலுக்கட்டாயமாக படைக்கு போர் முனைக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள். என்னுடைய மகன் இழுத்துச் செல்லப் படவில்லை என்பதை மட்டும் கூறுங்கள். இது வரமா சாபமா என்பது யாருக்கும் தெரியாது. யாராலும் தெரிந்து கொள்ளவும் முடியாது. கடவுளே அறிவார்.” என்றார். அந்த வயதானவர் கடமைகளைச் செய்து கொண்டே இருந்தார். பலா பலன்களை வந்தது வந்தபடி ஏற்றுக் கொண்டார். எந்த சூழ்நிலையிலும் அமைதி இழக்கவில்லை. எல்லாம் இறைவன் செயல் என்று நினைத்தார். இப்படி நினைப்பவர்களுக்கு அமைதியும் இனிமையும் தானாக வந்து விடும்.

தேஜஸ்வி

 

The post முழுக் கதையும் அறியாமல் முடிவெடுக்காதீர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article