முல்லைபெரியாரில் புதிய அணை.. சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

4 hours ago 3

புதுடெல்லி,

கேரளாவில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான முல்லைப்பெரியாறு அணையின் மூலமாக கிடைக்கும் நீரை தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட மக்கள் பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த அணை பராமரிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர சிங் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கைகளுக்கு மேற்பார்வைக்குழு தீர்வு காணும் கூட்டத்தை நடத்த வேண்டும். இரு மாநிலங்களும் ஏற்கும்படியாக அந்த தீர்வு இருக்க வேண்டும். தீர்வு காண முடியாத விஷயங்களை அறிக்கையாக சுப்ரீம் கோர்ட்டில் மேற்பார்வைக் குழு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், "வல்லக்கடவு- முல்லைப் பெரியாறு சாலையை செப்பனிடுவதற்கு அனுமதிக்க முடியாது. அடிக்கடி மழையாலும், ஆற்றுநீர்ப் பெருக்காலும் சாலை பாதிக்கப்படும். வனப்பகுதி என்பதால் அனுமதிக்க முடியாது. தற்போதைய முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும் தீர்வாக அமையும். புதிய அணை கட்டுவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். புதிய அணை கட்டுவதற்கான அனைத்து செலவுகளையும் கேரள அரசே ஏற்கும். அணை மேற்பார்வைக் குழுவை கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article