முல்லை மலரில் நல்ல லாபம்!

2 hours ago 2

விவசாயத்தில் லாபம் பார்க்க ஏக்கர் கணக்கில் நிலம் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. 20 சென்ட் நிலத்தில் கூட நிறைவான நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் ராணிப்பேட்டை மாவட்டம் உப்பரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பாரதி. காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட இந்தக் கிராமத்தில் பலரும் நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வரும் நிலையில் பாரதி கையில் எடுத்திருப்பது முல்லை சாகுபடியை. இந்த முல்லைதான் இவருக்கு தினசரி வருமானத்தைத் தந்து மகிழ்வித்து வருகிறது. எலக்ட்ரிக்கல் வேலைகளுக்கு இடையே விவசாயத்தைக் கவனித்து வரும் இவரை ஒரு மாலை வேளையில் சந்தித்தோம். “ எனது பள்ளிப் பருவக் காலங்களில் தாத்தா வயலில் கடுமையாக உழைப்பார். நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யும்போது நானும் உடனிருப்பேன். பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அவருடன் வயலுக்குச் சென்று அவருக்கு உதவியாக பல்வேறு வேலைகள் செய்வேன். இதனால் எனக்கு சிறுவயது முதலே விவசாயம் பரிச்சயமானது. விவசாய வேலைகளுக்கு இடையே 10ம் வகுப்பு வரை படித்தேன். பின்பு எலெக்டிக்கல் வேலையைக் கற்றுக்கொண்டேன். இப்போது முழுநேரப் பணியாக எலக்ட்ரிஷியன் வேலை செய்கிறேன். பணி நேரம் போக மற்ற நேரங்களில் விவசாயப் பணிகளை மேற்கொள்கிறேன். ஒப்பந்த முறையில் எலக்ட்ரிக் பணிகளைச் செய்து வந்தாலும், விவசாயத்தை நேர்த்தியாக செய்து, அதில் குறிப்பிட்ட அளவில் வருமானம் பார்க்க வேண்டும் என நினைப்பேன். இதனால் தினமும் வருமானம் தரக்கூடிய முல்லை பூ சாகுபடியைத் தேர்வு செய்தேன்.

எங்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் நெல், மணிலா என தொடர்ந்து செய்து வந்த நிலையில், நான் முதன்முறையாக 20 சென்ட் நிலத்தில் முல்லைப்பூவை சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். இதற்காக திண்டிவனம் பகுதிக்குச் சென்று நாற்று வாங்கி வந்து நடவுப்பணிகளைத் தொடங்கினேன். பின்னர் பலரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு பராமரிப்புப் பணிகளை கண்ணும் கருத்துமாக மேற்கொண்டேன். கன்று நடவு செய்த ஒரு வருடத்திற்குப் பிறகு பூக்கள் வரத்தொடங்கியது. அதில் கிடைத்த வருமானம் எனக்கு ஊக்கம் தருவதாக இருந்தது. முல்லையைப் பொருத்தவரை சீசனுக்கு சீசன் வருமானம் கூடுதலாகவும், குறைவாகவும் கிடைக்கும். சீசன் இல்லாத நேரத்தில் ஒரு சேர் (300-கிராம்) ரூ.150 முதல் விற்பனை ஆகும். கார்த்திகை மாதம் மற்றும் சுப விசேஷ நாட்களில் ஒரு சேர் ₹300 வரை விற்பனை ஆகும். தற்போது 20 சென்டிற்கு 30 சேர் வரை சாகுபடி கிடைக்கிறது. இதனால் நாள்தோறும் செலவுகள் போக ரூபாய் ஆயிரம் வரை லாபமாக கிடைக்கிறது. விவசாயப் பணிகள் காலை 8 மணிக்குள்ளாக முடிந்து விடும். பின்னர் என்னுடைய எலக்ட்ரிக் ஒர்க்ஸ் பணிகளைப் பார்க்கப் போய்விடுவேன்.20 சென்ட் நிலத்தில் மற்ற பயிர்களைச் சாகுபடி செய்தால் நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ.6 ஆயிரம் மட்டுமே லாபமாக கிடைக்கும். ஆனால் அதே 20 சென்ட் நிலத்தில் முல்லைப்பூ சாகுபடி செய்வதால் மாதம் குறைந்தது ரூ.20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. விசேஷ நாட்களில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்தால் கூடுதலாக லாபம் கிடைக்கும். ஆனால் நான் அருகாமையில் உள்ள வாலாஜா தினசரி மார்கெட்டில் விற்பனை செய்து விடுகிறேன். இதேபோல் எங்கள் ஊரைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் சில்லறையாக விற்பனை செய்து வருகிறேன். இதில் கிடைக்கும் வருமானத்தால், தற்போதுள்ள முல்லைத்தோட்டத்திற்கு அருகில் மேலும் 20 சென்ட் நிலத்தில் முல்லைச் செடிகளை நடவு செய்திருக்கிறேன். இந்த நிலத்தில் 5 அடி இடைவெளி விட்டு 200 குழிகள் தோண்டி நடவு செய்திருக்கிறேன்.

முல்லைப்பூ செடிகள் திண்டிவனம், ஒடுகத்தூர், திருத்தணி உள்ளிட்ட பகுதி களில் கிடைக்கிறது. மேலும் பூ செடியில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த பூ செடி துளிர் விடும் போது, மற்றும் அரும்பு விடும்போதும் மருந்து தெளித்தல் வேண்டும். தற்போது மழைக்காலங்களில் பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படும். இதனால் 15-நாட்களுக்கு ஒரு முறை பூச்சி மருந்து தெளித்து பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த முடியும். மேலும் பொட்டாஷ் காம்ப்ளக்ஸ் போன்ற உரங்களை கொடுத்து, வாரத்திற்கு ஒருமுறை பூச்செடிகளை பார்வையிட்டு பூச்சி தாக்குதல் இருந்தால், அதற்கு மருந்து தெளித்து வருகிறோம்.அதேபோல் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காதவாறு வடிகால்வாய் அமைத்து பராமரித்து வருகிறேன். இதனால் பூச்செடிகளில் வேர் ஜல்லி அடிப்பதை தவிர்க்க முடியும். இதேபோல் பூச்செடிகளில் பூ உதிர்வதையும் கட்டுப்படுத்த முடியும். இதனால் மழைக்காலங்களில் பூச்செடிகளில் அரும்புகள் நிலைத்து லாபம் ஈட்டும். முல்லை சாகுபடியில் முழு லாபம் கிடைப்பதாக விவசாயி மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.
தொடர்புக்கு:
பாரதி – 90920 79178

The post முல்லை மலரில் நல்ல லாபம்! appeared first on Dinakaran.

Read Entire Article