முறையான லாபம் தரும் முந்திரி பிராசஸிங்… முத்திரை பதிக்கும் பெண் விவசாயி!

2 months ago 11

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதி முந்திரி விளைச்சலுக்கு பேர் போன பகுதி. பண்ருட்டியைப் போல முந்திரி மரங்களால் சூழப்பட்டிருக்கும் இந்தப் பகுதியில் முந்திரிதான் பிரதான பணப் பயிர் என்பதை விளக்கத் தேவையில்லை. வயற்காடுகளை முந்திரி மரங்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். இந்தப் பகுதியில் வயல், கழனி, தோட்டம் என்ற வார்த்தைகள் புழங்காது. ஆல் இன் ஆல் முந்திரிக்காடுதான். முந்திரிக்காடுகளுக்கு இடையே சில பயிர்கள் செழித்திருக்கும். வெயில் காலங்களில் மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் முந்திரிப் பழங்கள் தோப்புகளில் மின்னிக்கொண்டிருக்கும். அவற்றைப் பறித்து, கொட்டையைத் திருகி வீட்டுக்கு கொண்டு வந்து காய வைத்து விற்பனை செய்வதெல்லாம் பெரிய அளவிலான பிராசஸ். இந்தப் பிராசஸில் பெரியவர்கள், சிறியவர்கள் என குடும்பம் குடும்பமாக ஈடுபடுவார்கள். இப்படி ஒரு பிராசஸில், கூடுதலான பிராசஸ்க்கு எடுத்துச் செல்லும் விவசாயிகளும் இருக்கிறார்கள். அதாவது தாங்கள் விளைவிக்கும் முந்திரிக்கொட்டைகளை பருப்புகளாக மாற்றி விற்பனைக்கு அனுப்பும் பிராசஸ். இந்த பிராசஸில் ஒருசிலரே ஈடுபடுவார்கள். அப்படி நூறில் ஒருவராக முந்திரி பிராசஸில் கலக்கி வருகிறார் உடையார்பாளையம் அருகில் உள்ள வீராக்கண் கிராமத்தைச் சேர்ந்த உமா குமார். தனது நிலத்தில் விளையும் முந்திரிக்கொட்டை மற்றும் வெளியில் வாங்கிய முந்திரிக்கொட்டைகளை பருப்புகளாக மாற்றி பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் பணியில் பிசியாக இருந்த உமா குமாரை ஒரு மதியப்பொழுதில் சந்தித்தோம்.

“எங்களுக்கு இந்தப் பகுதியில் சுமார் 10 ஏக்கர் நிலம் இருக்கு. அதில் 5 ஏக்கரில் முந்திரி விவசாயம்தான். மீதி இடங்களில் நிலக்கடலை, உளுந்து போட்டிருக்கோம். முந்திரிக்கு இடையிலும் உளுந்து போட்டிருக்கிறோம். எனது கணவர் 18 வயதில் இருந்து முந்திரிக்கொட்டை வியாபாரம் பார்த்து வருகிறார். அதாவது விவசாயிகள் விளைவிக்கும் முந்திரிக்கொட்டைகளை விலைக்கு வாங்கி, மூட்டையாக மொத்த விலைக்கு வெளியில் விற்பார். 2016ம் ஆண்டில் முந்திரிக்கொட்டைகளை நாமே உடைத்து பருப்புகளாக்கி விற்கலாமே என யோசித்தோம். அதன்படி 2 மெஷின்களை வாங்கி கொட்டைகளை உடைத்து விற்பனைக்கு அனுப்பினோம். அவை கைகளால் உடைக்கும் இயந்திரங்கள். 2 பேர் வேலைக்கு இருப்பார்கள். அதன்பிறகு 4 பேர், 10 என வேலைக்கு வர ஆரம்பித்தார்கள். கொட்டை அவிக்கும் இயந்திரம், பருப்பை ஹீட் செய்யும் இயந்திரம் என படிப்படியாக இயந்திரங்களை அதிகரித்து பிராசஸிங் வேலைகளை அதிகப்படுத்த ஆரம்பித்தோம். இப்போது தரமான பருப்புகளாக உருவாக்கி பல ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்புகிறோம்’’ என தங்களின் முந்திரி பிராசஸிங் ஹிஸ்டரியோடு ஆரம்பித்த உமா, முந்திரிப்பருப்புகள் எவ்வாறு உருவாகின்றன? என்பதையும் விளக்கினார்.

“முந்திரிக்கொட்டைகளை அவிக்கும் இயந்திரத்தில் வைத்து அவித்து, நீரை வெளியேற்றி, கொட்டைகளை இரண்டாக உடைப்போம். அதில் இருக்கும் முந்திரிப்பருப்புகளை போர்மா பெட்டிகளில் வைத்து 6 மணி நேரம் ஹீட் செய்வோம். இதை இரவு நேரத்தில்தான் செய்வோம். பின்பு விசில் வரும் நேரத்தில் வெளியில் எடுப்போம். அப்போது முந்திரிப் பருப்புகள் மொறுமொறுவென்று கல் போல இருக்கும். அவற்றை எடுத்து ஃபேன் மூலம் குளிர்விப்போம். அப்போது தரையில் தண்ணீர் ஊற்றி வைத்தும், சுவர்களில் ஈர சாக்குகளை கட்டி வைத்து ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்வோம். குளிர்வித்த பிறகு முந்திரிப் பருப்புகளில் இருக்கும் மேல்தோலை உரித்தெடுப்போம். ரப்பர் போல் இருக்கும் இந்தத் தோலைப் பிரித்தெடுக்கவும் மெஷின் வைத்திருக்கிறோம். தோலை உரித்த பிறகு சைஸ் வாரியாக பிரித்து, மீண்டுமம் ஹீட் செய்வோம். இப்போது பயிர்கள் அனைத்தும் மொறுமொறுவென இருக்கும். இந்த பதத்தில் உள்ள பருப்புகளை அரை கிலோ, ஒரு கிலோ, 5 கிலோ என பேக்கிங் செய்வோம்.

ரகங்களைப் பொருத்து ஒவ்வொன்றுக்கு ஒரு விலை இருக்கிறது. உடையாத பருப்புகளில் 2 ரகம் இருக்கும். அதில் முதல் ரகத்தை ரூ.850 என விற்பனை செய்வோம். இரண்டாவது ரகத்தை ரூ.750 என விற்போம். இரண்டாக உடைந்த பருப்புகளையும் அதுபோல் தரம் பிரித்து ரூ.750, 780 என விற்பனை செய்வோம். எங்களிடம் உள்ளூர் வியாபாரிகளே அதிகளவில் வந்து வாங்கிக் கொள்வார்கள். நாங்கள் கும்பகோணம் உள்ளிட்ட அருகில் உள்ள பகுதிகளுக்கு எடுத்து கடைகளுக்கு நேரடியாக விற்பனை செய்வோம். சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கிறோம். ஒரு ஏக்கர் நிலத்தில் மானாவாரியாக பயிர் செய்யும்போது 3 மூட்டை கொட்டைகள் மகசூலாக கிடைக்கும். தண்ணீர் பாசனம் இருந்தால் 8 மூட்டை வரை கிடைக்கும். 80 கிலோ எடை கொண்ட இந்த மூட்டைகள் ரூ.12 ஆயிரம் முதல் 13,500 வரை விலை போகிறது. இந்தப்பகுதியில் பெரும்பான்மையாக மானாவாரி விவசாயம் நடப்பதால் அதிகபட்சம் 3 மூட்டை கிடைப்பதே பெரிய விசயம். இதன்மூலம் அதிகபட்சம் ஏக்கருக்கு 40 முதல் 50 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும்.நாங்கள் முந்திரிப்பருப்பாக விற்பதால் அதைவிட கூடுதல் லாபம் பார்க்கிறோம்’’ என பெருமிதத்துடன் பேசி முடித்தார்.

உடையார்பாளையம் பகுதியில் இயங்கி வரும் கிரீடு வேளாண் அறிவியல் நிலையம் உமாவுக்கு முந்திரி சாகுபடி, பிராசஸிங் குறித்து சில தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையத்தின் அலுவலர்கள் உமாவின் வயலுக்கு கள ஆய்வு மேற்கொண்டு தழைச்சத்து மேம்பாடு, பூச்சிக் கட்டுப்பாடு குறித்து விளக்கம் அளிக்கிறார்கள்.

 

The post முறையான லாபம் தரும் முந்திரி பிராசஸிங்… முத்திரை பதிக்கும் பெண் விவசாயி! appeared first on Dinakaran.

Read Entire Article