முரசொலி செல்வம் மறைவு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

1 month ago 7

சென்னை: முரசொலி செல்வம் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): முரசொலிக்கு எதிரான ஆட்சியாளர்களின் அடக்குமுறையையும், வழக்குகளையும் துணிவுடன் எதிர்கொண்டவர். முரசொலி செல்வம் மறைவு திமுகவிற்கும், முரசொலி நாளேட்டிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்): முரசொலி செல்வம் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் மு.க.ஸ்டாலின், மு.க.செல்வி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், முரசொலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): முரசொலி வளர்ச்சிக்கும், திமுக எழுச்சிக்கும் அரும்பாடுபட்ட முரசொலி செல்வம் திரைப்படத்துறையிலும் முத்திரை பதிக்கும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். முரசொலி செல்வம் மறைவு, முரசொலி ஏட்டிற்கும், திமுகவிற்கும் மட்டுமல்ல, திராவிடர் இயக்கத்திற்கே பேரிழப்பாகும். அவரது பிரிவுத் துயரால் வேதனையில் துடிக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், முரசொலி செல்வத்தின் வாழ்க்கைத் துணைவியார் செல்விக்கும், முரசொலி செல்வத்தின் மகள் ஜோதிமணிக்கும், திமுகவின் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணாமலை (தமிழக பாஜ தலைவர்): முரசொலி செல்வம் குடும்பத்தினருக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முரசொலி செல்வம் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): முரசொலி செல்வத்தின் எழுத்துப் பணிகள் மரணதறுவாயிலும் தொடர்ந்துள்ளது. கட்டுரைகள் எழுத குறிப்புகள் எடுத்து வைத்துவிட்டு கண்அயர்ந்த நிலையில் இயற்கை எய்தினார் என்கிற துயரச் செய்தி நம்மை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவரது பிரிவால் துயருற்றுள்ள, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், குடும்பத்தார்க்கும், ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): துணிச்சல்மிக்க எழுத்தாளர், கட்டுரையாளர், அதிர்ந்து பேசாத பண்பாளர். பழகுவதற்கு இனிமையானவர். அவரது மறைவு திமுகவிற்கும், ஜனநாயக இயக்கத்திற்கும், பத்திரிகை உலகிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள முதல்வருக்கும், முரசொலி செல்வம் மனைவி செல்வி மற்றும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருமாவளவன் (விசிக தலைவர்): முரசொலி செல்வத்தின் மறைவு ஊடக உலகத்திற்கும் திமுகவிற்கும் நேர்ந்த பேரிழப்பாகும். முரசொலி நாளிதழில் எழுதிய கட்டுரை ஒன்றிற்காக தமிழக சட்டமன்றத்தில் முதன்முதலாக விசாரணை கூண்டில் நிறுத்தப்பட்டவர். அப்போது துணிச்சலாக வாதிட்டு ஊடக அறத்தை காத்தவர். சிலந்தி என்னும் பெயரில் முரசொலியில் அவர் தொடர்ந்து எழுதி வந்த விமர்சனக் கட்டுரைகள் அரசியல் தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அரசியலரங்கில் மட்டுமின்றி, திரைப்படங்கள் தயாரிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு கலைத்துறையிலும் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் முரசொலி இதழின் நிர்வாகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழிசை சவுந்தரராஜன்(பாஜ), ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்), பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக பொதுச்செயலாளர்), அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்), எம்.கிருஷ்ணசாமி (காங்கிரஸ் முன்னாள் தலைவர்), தமிமுன் அன்சாரி (மஜக தலைவர்), ஜவாஹிருல்லா(மமக தலைவர்), எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழகம் தலைவர்), பிரசிடெண்ட் அபூபக்கர் அபூபக்கர் (இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர்), நடிகர் சரத்குமார் உள்பட பலர்் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post முரசொலி செல்வம் மறைவு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article