சென்னை: முரசொலி செல்வம் மறைய வில்லை, உதயசூரியனின் கதிராக ஒளிவீசி நமக்கு என்றும் வெளிச்சம் தருவார் என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்ணன் முரசொலி செல்வம் எனும் கழகத்தின் கொள்கைச் செல்வத்தை, திராவிட இயக்கத்தின் படைக்கலனை இழந்துவிட்டோம். நெருக்கடிநிலைக் காலத்தில் கலைஞரும் கடும் சோதனைகளை எதிர்கொண்டபோது முரசொலி மாறனும் நானும் கழக முன்னோடிகளும் மிசா சிறைவாசம் எனும் கொடுமைக்குள்ளானோம். தனிமைச்சிறை போன்ற சூழலில் இருந்த தலைவர் கலைஞருக்கு துணையாக இருந்து முரசொலி பணிகளிலும் கழகச் செயல்பாடுகளிலும் தோள் கொடுத்தவர்களில் முதன்மையானவர் அண்ணன் செல்வம்.
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமரானபோது முரசொலி மாறன் ஒன்றிய அரசில் கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதனால், அவர் வகித்த முரசொலியின் ஆசிரியர் பொறுப்பை யார் ஏற்பது என்றபோது, அண்ணன் செல்வத்திடம் ஒப்படைத்தார் கலைஞர். அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் முரசொலியை மேலும் மேலும் கூர்தீட்டிய படைக்கலனாக மாற்றியவர் அண்ணன் முரசொலி செல்வம். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளில், அரசியல் எதிரிகளால் காழ்ப்புணர்வுடன் முரசொலி அலுவலகம் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், அடுத்தநாளே முரசொலி தடையின்றி வெளிவருவதில் முழுமூச்சுடன் செயல்பட்டு, தலைவர் கலைஞரின் மனக்காயங்களுக்கு மருந்திட்டவர்.
அதிமுக ஆட்சியில் முரசொலியில் வெளியான செய்திக்காகக் கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் வகையில், இந்தியாவின் எந்த மாநிலச் சட்டமன்ற வரலாற்றிலேயேயும் இல்லாத வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் கூண்டு கொண்டுவரப்பட்டு, அதில் ஏற்றப்பட்டார் முரசொலி ஆசிரியரான செல்வம். இந்த ஜனநாயக விரோதச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தலைவர் கலைஞரின் ஆலோசனைப்படி கருப்புச் சட்டை அணிந்து கூண்டிலேறிய கொள்கைச் சிங்கம் அவர். சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் அவர் பின்னிய எழுத்துவலையில் சிக்காத அரசியல் எதிரிகள் இல்லை.
எவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்காமல், அவர்களின் கொள்கை முரண்களைக் கூர்மையான வாதங்களுடனும், யாரை விமர்சிக்கிறாரோ அவர்களேகூட ரசிக்கும் வகையிலான நையாண்டி நடையிலும் அண்ணன் செல்வம் எழுதிய கட்டுரைகள் அரசியல் இயக்கங்களில் உள்ளவர்களுக்கும், ஊடகத் துறையில் இருப்போருக்கும் வழிகாட்டிகளாகும். 35 ஆண்டுகளுக்கும் மேலாக, முரசொலியின் ஆசிரியராக அண்ணன் முரசொலி செல்வம் பணியாற்றிய நிலையில்தான், 2017ம் ஆண்டு முரசொலியின் பவளவிழாவைக் கொண்டாடினோம். மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் அந்த விழாவில் பங்கெடுத்து, இதழியல் துறையில் முரசொலியின் பங்களிப்புகளைப் பாராட்டிப் பேசினர்.
அந்த விழாவில் என்னுடன் மேடையைப் பகிர்ந்துகொண்ட அண்ணன் முரசொலி செல்வம், அதன்பிறகு, 2021ம் ஆண்டு நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் அரங்கேறிய ‘முரசொலி: சில நினைவலைகள்’ நூல் வெளியீட்டில் என்னுடன் மீண்டும் மேடையைப் பகிர்ந்து கொண்டார். “தோண்டத் தோண்டச் செய்திப் புதையல்கள் தேடத் தேடக் கழக மறவர்களின் தியாக வரலாறுகள் அப்பப்பா…. எத்தனை எத்தனை நெருப்பாற்று நீச்சல்கள்” என அவர் அன்று பேசியது இன்றும் நெஞ்சைவிட்டு அகலவில்லை. சமூகநீதிப் பயண வழியில் இயற்கை உருவாக்கிய இடர்பாடு என்று கருதி, துயரத்தில் துணைநின்று ஆறுதல் தெரிவித்த தோழமைக் கட்சியின் தலைவர்கள்-நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரின் கரம் பற்றி நன்றியை உரித்தாக்குகிறேன்.
கலைஞரின் படத்தைத் தயாரித்த அண்ணன் செல்வம், கலைஞரின் முரசொலி எனும் கருத்துக் களத்திற்குரிய எழுத்தாயுதங்களை அடுத்த தலைமுறையிடம் வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய கொள்கைப் பேனா என்றும் முரசொலிக்கும். அவர் ஊட்டிய லட்சிய உணர்வு நம்மை நெருக்கடிகளிலிருந்து மீட்டெடுத்து இயக்கும். அவரது இறுதி நிகழ்வுகள் நிறைவேறிய சில நிமிடங்களில் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதில் சிக்கலுக்குள்ளான விமானம் குறித்த செய்தி அறிந்ததும், அதில் இருந்த பயணிகள் பத்திரமாகப் பாதுகாக்கப்படவேண்டும் என்ற அக்கறையுடன் அதிகாரிகளைத் தொடர்ந்து வலியுறுத்தியதுடன், விமான பைலட் மற்றும் குழுவினரின் திறமையால் அனைவரும் பாதுகாப்புடன் கீழே இறங்கினர் என்று அறிந்ததும் அது குறித்த என் அறிக்கையை வெளியிட்டுப் பாராட்டி மகிழ்ந்தேன்.
அதுபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் ரயில் விபத்து என்ற செய்தி இரவு நேரத்தில் கிடைத்த வேகத்தில், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களைக் களத்திற்கு அனுப்பியதுடன், காயம்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவக் கட்டமைப்புகள் அனைத்தும் சீராக இருக்கின்றனவா என்பதையும் உறுதி செய்து, உயிரிழப்பினைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எந்த நிலையிலும் கடமையை நிறைவேற்றிடத் தலைவர் கலைஞரிடம் பயின்ற அண்ணன் முரசொலி செல்வத்திடம் பெற்ற உத்வேகத்தின் தாக்கத்தை உணர்ந்தேன். முரசொலி செல்வம் மறையவில்லை. உதயசூரியனின் கதிராக ஒளிவீசி நமக்கு என்றும் வெளிச்சம் தருவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post முரசொலி செல்வம் மறையவில்லை உதயசூரியனின் கதிராக ஒளிவீசி நமக்கு என்றும் வெளிச்சம் தருவார்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.