மும்மொழிக் கொள்கையை ஏற்றே ஆக வேண்டும் ஒன்றிய அரசு மீண்டும் பிடிவாதம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்

2 months ago 7

சென்னை: மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு மீண்டும் பிடிவாதமாக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்று தமிழக அரசு மறுத்து விட்டது. இதனால் ஒன்றிய அரசு தமிழக கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2152 கோடியை நிதியை வழங்க முடியாது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிடக் கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார். இந்தநிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாட்டின் மாணவர்களின் தலைவிதியை வடிவமைக்கும் பொறுப்பு தலைவர்களுக்கு உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு மாணவர்களின் அறிவு, திறன்கள் மற்றும் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பது கட்டாயமாகும்.

தேசிய கல்விக் கொள்கை – 2020 என்பது வெறும் சீர்திருத்தம் மட்டுமல்ல; நம்முடைய நாட்டின் மொழியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மையைப் பாதுகாத்து வலுப்படுத்தும். இந்தியாவின் கல்வி முறையை உலகளாவிய தரத்திற்கு உயர்த்தும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதற்கான தொலைநோக்குப் பார்வை தேசிய கல்விக் கொள்கையில் உள்ளது.

இந்தக் கொள்கை ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் தாய்மொழியில் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது.தமிழ்நாடு எப்போதும் சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்தின் முன்னோடி மாநிலமாக இருந்து இருந்து வருகிறது. நாட்டிலேயே மாற்றத்தக்க சீர்திருத்தங்களின் முன்னோடியாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. நவீன கல்வியை வடிவமைத்த, ஓரங்கட்டப்பட்ட சமூகங்களை மேம்படுத்திய மற்றும் அனைவருக்கும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வளர்த்த மாநிலங்களில் முன்னணியில் தமிழ்நாடு உள்ளது.

இருப்பினும், அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பது மாணவர்கள், ஆசிரியர்களுக்கான மகத்தான வாய்ப்புகள் பாதிக்கும். சமக்ர சிக் ஷா போன்ற ஒன்றிய அரசின் திட்டங்கள் தேசிய கல்விக் கொள்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பிஎம் ஸ்ரீ திட்டப் பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையின் முன்மாதிரியான பள்ளிகளாகக் கருதப்படுகின்றன. எனவே, தேசிய கல்விக் கொள்கையை குறுகிய பார்வையுடன் பார்ப்பதும், முற்போக்கான கல்வி சீர்திருத்தங்களை தங்களது அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தி அச்சுறுத்தல்களாக மாற்றுவதும் சரியாக இருக்காது.

சமீபத்தில் பிரதமர் மோடிக்கு தாங்கள் எழுதியுள்ள கடிதமானது, ஒன்றிய அரசால் ஊக்குவிக்கப்படும் கூட்டாட்சி தத்துவத்தை முழுமையாக மறுப்பதாகும். தேசிய கல்விக் கொள்கையானது, எந்த மொழியையும் திணிப்பதை ஆதரிக்கவில்லை. பாஜ ஆட்சியில் இல்லாத பல மாநிலங்கள், தங்களது அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் தேசிய கல்விக் கொள்கைகையை செயல்படுத்தியுள்ளன. தேசிய கல்விக் கொள்கையானது எல்லையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது; கல்வியின் எல்லையை சுருக்குவதில்லை. எனவே, அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, நம்முடைய மாணவர்களின் கற்கும் ஆர்வத்தை மனதில் கொண்டு தாங்கள் தேசிய கல்விக் கொள்கை விஷயத்தை முழுமையாக ஆராய கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

The post மும்மொழிக் கொள்கையை ஏற்றே ஆக வேண்டும் ஒன்றிய அரசு மீண்டும் பிடிவாதம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article