மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி ஒதுக்க முடியாது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று நாம் தமிழக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
விக்கிரவாண்டி அருகே 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது ராஜீவ்காந்தியை அவதுாறாகப் பேசியதாக கஞ்சனுார் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சீமான் நேற்று ஆஜரானார். ராஜீவ் காந்தியை அவதுாறாகப் பேசியதை ஒப்புக் கொள்கிறீர்களா என்று நீதிபதி கேட்டபோது, அதை சீமான் மறுத்தார். இதையடுத்து, விசாரணையை மார்ச் 26-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.