புதுச்சேரி, மே 21: புதுச்சேரியில் ஆன்லைன் கும்பல் நூதன முறைகளில் 9 பேரிடம் ரூ.4.85 லட்சத்தை ஏமாற்றியுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை சேர்ந்த ஒரு ஆண் நபர், புதுச்சேரியில் தங்குவதற்காக ஓட்டல் குறித்த விவரங்களை இணையதளத்தில் தேடியுள்ளார். அப்போது, தனியார் ஓட்டல் ஒன்றின் இணையதளத்தில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண் மூலம் தெரியாத நபரை தொடர்பு கொண்டு பேசியபோது, அந்த நபர் அறைகளை முன்பதிவு செய்வதற்கு பணம் கேட்டுள்ளார். இதையடுத்து சென்னையை சேர்ந்த நபரும் ரூ.68,600ஐ அனுப்பி ஏமாந்துள்ளார்.
உழவர்கரையை சேர்ந்த பெண்ணை தெரியாத நபர் தொடர்பு கொண்டு ஆன்லைனில் முதலீடு செய்து சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பி அந்த பெண்ணும் ரூ.99 ஆயிரத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளார். கூடப்பாக்கத்தை சேர்ந்த நபர் ஒருவர், ஆன்லைனில் மளிகை பொருள் விற்பனை தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். பிறகு, விளம்பர பக்கத்தில் உள்ள லிங்கை கிளிக் செய்தபோது, ஏபிகே செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அவரும் செய்து முடித்து கிரெடிட் கார்டு விவரங்களை பதிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.1,22,900 மோசடியாக எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
முத்திரையர்பாளையத்தை சேர்ந்த ஆண் நபரை, தெரியாத நபரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அந்த நபர் இலவச உடலுறவுக்கு டேட்டிங் செயலியில் பதிவு செய்யுமாறு கூறி வற்புறுத்தியதுடன் பல்வேறு தவணைகளாக பணம் கேட்டுள்ளார். அதன்பேரில் முத்திரையர்பாளையத்தை சேர்ந்த நபரும் ரூ.1,73,300ஐ அனுப்பி ஏமாந்துள்ளார். மேற்கூறிய நபர்கள் உட்பட மொத்தமாக 9 பேரிடம் ரூ.4.85 லட்சத்தை ஆன்லைன் மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post புதுவையில் 9 பேரிடம் ரூ.4.85 லட்சம் மோசடி appeared first on Dinakaran.