மும்பையை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி

2 days ago 5

அகமதாபாத்,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 9வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்ஷன், கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி அணிக்கு சிறப்பான தொடக்கம் அளித்தனர். 27 பந்துகளில் 38 ரன்கள் விளாசிய சுப்மன் கில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் தொடர்ந்து அதிரடியாக ஆடினர். அவர் அரைசதம் விளாசினார்.

அதேவேளை, 24 பந்துகளில் 39 ரன்கள் குவித்த பட்லர் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷாருக்கான் 9 ரன்னில் அவுட் ஆனார். சிறப்பாக ஆடிய சாய் சுதர்ஷன் 41 பந்துகளில் 63 ரன்கள் விளாசி அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இறுதியில் குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 197 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் ரோகித் சர்மா 8 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான ரிக்கெல்டன் 6 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த திலக் வர்மா, சூர்யகுமார் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 36 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த திலக் வர்மா கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்துவந்த ராபின் மின்ஸ் 3 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 28 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அவுட் ஆனார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 11 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. சாண்ட்னர், நமன் தலா 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் மும்பை இந்தியன்சை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

Read Entire Article