மும்பை,
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் உள்ள மிரா ரோடு பகுதியில் தனது மாமா வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த பெண் கடந்த 7-ந்தேதி இரவு உறவினர் ஒருவரின் வருகைக்காக பாந்த்ரா ரெயில் நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் உறவினர் வராததால் அந்த பெண் பயத்தில் அழுது கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை கவனித்த 31 வயது வாலிபர் ஒருவர், அந்த பெண்ணிடம் தனது காரில் லிப்ட் தருவதாக கூறியுள்ளார். அதை நம்பி காரில் ஏறிய இளம் பெண்ணை, அந்த நபர் மஹிம் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை மீண்டும் பாந்த்ரா ரெயில் நிலையத்தில் இறக்கி விட்டு, அந்த வாலிபர் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் அந்த பெண் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில், மும்பை சாண்டாகுரூஸ் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.