
சென்னை,
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி நேற்று மாலை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்று இரவு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசதில் அபார வெற்றி பெற்றது.
இதன் முடிவில் புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை குறித்து இங்கு காணலாம்..!
10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து தலா 12 புள்ளிகள் பெற்ற நிலையில் ரன்ரேட் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் (+1.104) 2-வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் (+0.889) 3-வது இடத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் (+0.482) 4-வது இடத்திலும் உள்ளன.
பஞ்சாப் கிங்ஸ் 11 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 10 புள்ளிகளுடன் 6-வது இடதிலும், 7 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் உள்ளன.
தலா 4 புள்ளிகள் மட்டுமே பெற்ற நிலையில் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் (-0.625) 9-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் (-1.302) கடைசி இடத்திலும் உள்ளது.