மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் தக்கவைக்கப்பட்ட வீர்ர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கும் காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பித்து விட்டன.
இதில் அனைவரும் எதிர்பார்த்த 5 முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. இதன்படி ஜஸ்பிரித் பும்ரா (ரூ.18 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ.16.35 கோடி), ஹர்திக் பாண்டியா (ரூ.16.35 கோடி), ரோஹித் சர்மா (ரூ.16.30 கோடி), திலக் வர்மா (ரூ.8 கோடி) ஆகியோரை அந்த அணி தக்க வைத்துள்ளது.
முன்னதாக கடந்த சீசனில் கேப்டன் பதவியில் இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது ரசிகர்களிடையே அந்த அணி மீது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அதன் காரணமாக நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல். தொடரில் ரோகித் சர்மா மும்பை அணியில் விளையாட மாட்டார் என்று கடந்த பல மாதங்களாக பல்வேறு கருத்துகள் உலா வந்தன. ஆனால் நேற்று மும்பை அணி வெளியிட்ட தங்களது அணி வீரர்களின் பட்டியலில் தக்க வைத்த ஐந்து வீரர்களில் ரோகித் சர்மாவும் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் மும்பை அணியில் மீண்டும் விளையாட இருப்பது குறித்து பேசிய ரோகித் சர்மா கூறுகையில், "உங்களுக்கே தெரியும் நான் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். அதன் காரணமாக தற்போது நான் தக்க வைக்கப்பட்டிருக்கும் இடம் சரிதான் என்று நினைக்கிறேன். ஏனெனில் தற்போதைய இந்திய டி20 அணியில் விளையாடும் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அந்த வகையில் என்னை விட மற்ற வீரர்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுத்ததில் மகிழ்ச்சிதான். தற்போதைய இடத்தில் நான் இருக்கும் நிலையும் எனக்கு திருப்தியாகத்தான் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு பகுதியாக மீண்டும் நான் இடம் பெற்று இருப்பதில் மகிழ்ச்சி. மும்பையில்தான் நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். இங்கு நிறைய கிரிக்கெட்டும் விளையாடியுள்ளேன். இந்த நகரம் எனக்கு சிறப்பு வாய்ந்தது. மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளது நல்ல உணர்வுகளை கொடுத்திருக்கிறது" என்று கூறினார்.