
மும்பை,
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இரண்டு விபத்து சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று காலை 11 மணிக்கு மாலேகான் தாலுகா அருகே தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் தவறான பாதையில் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் 2 பெண் பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
அதே போல் நேற்று இரவு சந்த்வாத் பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் பிரேக் செயலிழந்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், 5 நபர்கள் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.