
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அத்துடன் சேப்பாக்கம் மைதானத்தில் 17 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.
இதனால் அந்த அணியை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "முந்தைய சீசன்களை விட ஆர்சிபி அணியின் சமநிலை தற்போது 10 மடங்கு சிறப்பாக உள்ளது. ஐ.பி.எல். ஏலத்திற்கு முன் ஆர்சிபி அணிக்கு சமநிலை தேவை என்று நான் பேசினேன். இது வீரர்களை பற்றியது அல்ல. அணியை பற்றியது. ஏலத்தில் அவர்கள் சிறந்த வீரர்களை வாங்கி சமநிலையை ஏற்படுத்தியுள்ளனர்" என்று கூறினார்.