![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/36415538-tharpanam2.webp)
தை அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 3 மணி முதலே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை திரிவேணி சங்கமம் பகுதியில் கடலில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து முன்னோர்களுக்காக பலிகர்ம பூஜை மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் ஏராளமானோர் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
அங்கு தொடங்கி நெல்லை மாவட்டம் பாபநாசம் வரையிலான 64 தீர்த்த கட்டங்கள், தாமிரபரணி பாயும் கரையோர பகுதிகள், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தை அமாவாசை தினத்தையொட்டி புனித நீராடி, தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன், ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறைகள், கருட மண்டபத்தில் இன்று காலை திரண்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். மேலும் கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகள், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில், அறந்தாங்கியை அடுத்த கடற்கரை பகுதிகளிலும் பக்தர்கள் புனித நீராடினர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை, சீர்காழியை அடுத்த பூம்புகார் கடற்கரை, மயிலாடு துறை மாவட்டம் காவிரி துலாக்கட்டம் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர் கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கருங்கல்பாளையம் காவிரி கரையோர பகுதிகளில் அதிகாலை முதலே திரண்ட பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மதுரையில் வைகை கரையோர பகுதிகள், சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகத்தில் வைகை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி, ஏடகநாதர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் விருதுநகர் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.
பவானி சங்கமேஸ்வரர் கோவில் கூடுதுறை பின்பகுதியில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் கூடுதுறைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடினர். தங்கள் முன்னோர்களுக்கு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பல்வேறு பரிகார பூஜைகள் செய்து விட்டு சென்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.