
விருதுநகர்,
விருதுநகர் அ.தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது இவர் பால்வளத்துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் ஆவினில் வேலை வாங்கி தருவதாக பல்வேறு நபர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அளித்த புகாரின் அடிப்படையில் கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்பட 7 பேர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊழல் மற்றும் மோசடி வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த மாதம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதன்பின்பு கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இனிமேல் ராஜேந்திர பாலாஜி மீதான இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை கோர்ட்டில்தான் நடக்கும். இந்த கோர்ட்டில்தான் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான ஊழல் வழக்குகளும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.