முந்தைய மதிப்பீட்டை காட்டிலும் 2 மடங்கு அதிகரிப்பு; ஒரு சிகரெட் புகைத்தால் 20 நிமிடம் ஆயுள் குறையும்: புதிய ஆய்வில் லண்டன் பல்கலை தகவல்

3 weeks ago 4

லண்டன்: ஒரு சிகரெட் புகைத்தால் 20 நிமிடம் ஆயுள் குறையும் என்று லண்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சி குழுவினர் சார்பில் புகைபிடித்தல் குறித்த புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஒருவர் ஒரு சிகரெட்டை புகைத்தால், அவரது ஆயுட்காலத்தில் சுமார் 20 நிமிடங்கள் ஆயுட்காலம் குறையும். மருத்துவ ஆராய்ச்சிகளின் முந்தைய மதிப்பீட்டை காட்டிலும், தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

20 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்தால், சம்பந்தப்பட்ட புகைப்பிடிப்பவர்களின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட ஏழு மணிநேரம் குறையும். எனவே புகைபிடிப்பதை கைவிடுவதால் உடனடி பயன்தரும். உதாரணமாக, தினமும் 10 சிகரெட் புகைப்பிடிப்பவர்கள், தொடர்ந்து 8 நாட்கள் புகைப்பிடிக்காமல் இருந்தால் அவர்கள் தங்களது ஆயுட்காலத்தில் ஒரு நாள் கூடுதலாக வாழ முடியும். இவ்வாறாக கணக்கிட்டால் ஓர் ஆண்டிற்கு பல நாட்களை அவர்கள் தங்களது வாழ்நாளில் சேமிக்க முடியும். உலகளவில் புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

புகைப்பிடிப்பவர்களிடையே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பேர் புகைப்பிடித்தல் தொடர்பான நோயினால் இறந்துள்ளனர். இங்கிலாந்தில் மட்டும் புகைபிடித்தல் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 80,000 பேர் இறக்கின்றனர். இங்கிலாந்தில் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் அதிகரித்து வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஜர்னல் ஆஃப் அடிக்ஷன்’ வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, ஒவ்வொரு சிகரெட் புகைப்பதாலும் ஆண்களின் ஆயுட்காலம் 17 நிமிடங்களும், பெண்களின் ஆயுட்காலம் 22 நிமிடங்களும் குறைகிறது. புகைபிடிப்பதால் ஆயுள் காலம் குறைவது மட்டுமல்லாமல், உடல்நலக்குறைவு வேகமாக ஏற்படுகிறது. குறிப்பாக இதய நோய், பக்கவாதம் போன்ற பாதிப்பை எதிர்கொள்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளது.

The post முந்தைய மதிப்பீட்டை காட்டிலும் 2 மடங்கு அதிகரிப்பு; ஒரு சிகரெட் புகைத்தால் 20 நிமிடம் ஆயுள் குறையும்: புதிய ஆய்வில் லண்டன் பல்கலை தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article