*அகற்ற கோரிக்கை
முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குகாடு பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. 1முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறனர்.
அதுமட்டுமின்றி அந்த வளாகத்தில் அங்காடி மையமும் இயங்கி வருகிறது. இந்த இரு பள்ளியிலும் சுற்று பகுதியை சேர்ந்த ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளிக்கு எதிரே ஒரு வடிகால் செல்கிறது.
இந்த வடிகால் தெற்குகாடு பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி இந்த வடிகாலில் செல்லும். அதேபோல் மழைக்காலத்தில் மழைநீர் வடியும் வகையில் உள்ள இந்த வடிகாலில் நெடுவெங்கும் ஆக்கிரமிப்பு உள்ளதால் வடிகால் சுருங்கி நீர் வடிய முடியாமல் உள்ளது.
அதிகபட்சமான நீர் வந்தால் மட்டுமே வடியும் நிலையில் உள்ள இதில் மாதக்கணக்கில் மழைநீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி விட்டது. அதேபோல் எந்தநேரமும் துர்நாற்றமும் வீசுகிறது.
இந்தநிலையில் இந்த வடிகாலில் அப்பகுதிமக்கள் மட்டுமின்றி சுற்று பகுதியை சேர்ந்தவர்கள் இங்கு ஒரு பள்ளிகூடம் இருப்பதை கூட பெரிது படுத்தாமல் இதில் குப்பைகள் கழிவுகள் கொட்டி வருகின்றனர்.
குறிப்பாக பள்ளி நிர்வாகமே இங்கு சேரும் குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்களை இதில் கொட்டி வருவதாக கூறப்படுகிறது. அதனால் மொத்தத்தில் இப்பகுதி ஒரு அசுத்தங்கள் நிறைந்த பகுதியாக காட்சியளிக்கிறது. குழந்தைகள் அதிக நேரம் பள்ளியில் இருக்கும் இந்த சூழ்நிலையில் இந்த கழிவுநீர் மற்றும் குவிந்து கிடக்கும் கழிவுகளால் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனியும் காலதாமதம் ஏற்படுத்தாமல்சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் பள்ளி எதிரே உள்ள இந்த வடிகாலில் மாதக்கணக்கில் தேங்கிக்கிடக்கும் கழிவுநீரை வெளியேற்றவும், குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post முத்துப்பேட்டையில் பள்ளி எதிரே வடிகாலில் தேங்கிக்கிடக்கும் கழிவுநீர், குப்பை தொற்றுநோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.