முத்துப்பேட்டை, ஜூன் 23: முத்துப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதி வேண்டி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியனை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மொத்தம் நூறுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளியில் பயில்கின்ற மாணவ, மாணவியர்கள் உயர் கல்விக்கு செல்ல வேண்டுமென்றால் கோவை, திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி இருந்தது. எனவே இப்பகுதி மாணவர்களின் நலன் கருதி முத்துப்பேட்டை பகுதியில் தனியாக அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர். இதுகுறித்து திமுக தேர்தல் வாக்குறுதியில் கல்லூரி அமைக்கப்படும் என கூறப்பட்டது மேலும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தொடர்ச்சியாக சட்டமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்து பேசி வந்தார்.
இந்தநிலையில் கடந்த மார்ச் 14ந்தேதி நடந்த தமிழ்நாடு அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் முத்துப்பேட்டையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால் முத்துப்பேட்டை மக்கள் நீண்டநாள் கனவு நிறைவேறியதை கண்டு மகிழ்ச்சியடைந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்தநிலையில் நிரந்தமாக கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யும் வரை கல்லூரியை இந்த (2025-26) கல்வி ஆண்டு முதல் செயல்பட ஆணை பிறப்பிக்கபட்டு சேர்க்கை விண்ணப்பங்கள் முத்துப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கல்லூரி தற்காலிகமாக இயங்கி வருகிறது.
இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து நேற்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியனை நேரில் சந்தித்து முத்துப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதி வேண்டி வலியுருத்தினார். அதற்கு அமைச்சர் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
The post முத்துப்பேட்டை அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்: அமைச்சரிடம் எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.