
கொழும்பு,
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாட்டு மகளிர் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடமும், இலங்கை 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் (2 புள்ளி) கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் முத்தரப்பு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி, இலங்கைக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் மட்டும் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. மற்ற அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று உள்ளது.
இலங்கைக்கு எதிரான தனது ஆதிக்கத்தை தொடர்ந்து இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற தீவிரம் காட்டும். அதேநேரத்தில் இந்தியாவை வீழ்த்த எல்லா வகையிலும் இலங்கை அணி கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டியில் 34 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்தியா 30 ஆட்டங்களிலும், இலங்கை 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.