![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/10/38705037-6-newzeakand-cricket-afp.webp)
லாகூர்,
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 304 ரன்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக அறிமுக வீரரான மேத்யூ பிரீட்ஸ்கே 150 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, வில்லியம் ஓ ரூர்க் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 305 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக டெவான் கான்வே மற்றும் வில் யங் களம் புகுந்தனர்.
இதில் வில் யங் 19 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து கான்வே உடன் சீனியர் வீரர் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினர்.
இதில் சீனியர் வீரர் வில்லியம்சன் சதம் அடித்து அசத்தினார். மறுபுறம் சதத்தை நெருங்கிய கான்வே 97 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து களம் புகுந்த டேரில் மிட்செல் 10 ரன்னிலும், டாம் லாதம் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். தொடர்ந்து கிளென் பிலிப்ஸ் களம் இறங்கினார்.
பிலிப்ஸ் - வில்லியம்சன் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இறுதியில் நியூசிலாந்து 48.4 ஒவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 308 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் கேன் வில்லியம்சன் 133 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி முத்தரப்பு ஒருநாள் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 12ம் தேதி கராச்சியில் நடைபெறும் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நியூசிலாந்துடன் இறுதிப்போட்டியில் மோதும்.