கராச்சி: பாகிஸ்தானில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. கராச்சியில் நேற்று நடந்த இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். சல்மான் அகா 45 ரன்கள், தையப் தாஹிர் 38 ரன்கள் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் 29 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
நியூசிலாந்து அணி சார்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட், பிரேஸ்வெல் மற்றும் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 45.2 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. நியூசிலாந்து அணி சார்பில் மிட்செல் 57 ரன்கள், டாம் லாதம் 56 ரன்கள், கான்வே 48 ரன்கள் மற்றும் கேன் வில்லியம்சன் 34 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
இந்தத் தொடரில் மற்றொரு அணியான தென்ஆப்பிரிக்கா 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னோட்டமாக இந்த தொடர் பார்க்கப்பட்ட நிலையில், இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய நியூசிலாந்து அணி இந்த தொடரில் தான் ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணிக்கு இந்த வெற்றி மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.
The post முத்தரப்பு ஒருநாள் தொடர்; கோப்பையை கைப்பற்றி நியூசிலாந்து அசத்தல்: சொந்த மண்ணில் சொதப்பியது பாகிஸ்தான் appeared first on Dinakaran.