
சென்னை,
நடிகை மாளவிகா மோகனன் பல மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் பாலிவுட்டில் அறிமுகமானார். விரைவில் பிரபாசின் 'தி ராஜா சாப்' படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார்.
மலையாளத்தில், சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'ஹிருதயபூர்வம்' படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், மும்பையில் கல்லூரி படித்தபோது சந்தித்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை மாளவிகா மோகனன் நினைவுகூர்ந்தார்.
அவர் கூறுகையில், " எனக்கு இப்போது சொந்தமாக கார் அதற்கு டிரைவர் உள்ளார். எனவே மும்பை பாதுகாப்பானதா என்று யாராவது என்னிடம் கேட்டால், ஆம் என்று சொல்வேம். ஆனால் நான் கல்லூரியில் படிக்கும்போது இதே பாதுகாப்பை உணரவில்லை.
ஒரு முறை நானும் என் நெருங்கிய நண்பர்கள் இருவரும் லோகல் ரெயிலில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தோம். அப்போது இரவு 9.30 மணி இருக்கும். நாங்கள் முதல் வகுப்பு பெட்டியில் ஜன்னல் அருகே அமர்ந்திருந்தோம். அதில் எங்களை தவிர வேறு யாருமே இல்லை.
அப்போது எங்களை பார்த்து ஒருவர் ஜன்னல் அருகே வந்து, கம்பிகளுக்கு அருகில் முகத்தை வைத்து "எனக்கு ஒரு முத்தம் தருவாயா?" என்று கேட்டார். அதை கேட்டதும் நாங்கள் அப்படியே உறைந்து போய்விட்டோம். ஒவ்வொரு பெண்ணுக்கும் இதுபோன்ற பல கதைகள் இருக்கும். எந்த இடமும் முழுமையாகப் பாதுகாப்பாக இருக்காது," என்றார்.