
சென்னை,
தங்கம் விலை கடந்த 12-ந்தேதி மளமளவென சரிந்து ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்துக்கு வந்தது. அதன் பின்னர் விலை சற்று உயர்ந்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.1,560 குறைந்து காணப்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு, தங்கம் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்று இருந்தது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் விலை அதிகரித்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 610-க்கும், ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.110-ம், பவுனுக்கு ரூ.880-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 720-க்கும், ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்தை தாண்டி, ரூ.70 ஆயிரத்தை தொடும் அளவுக்கு சென்றுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.70,040க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.8720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ. 1 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 109க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை ரூ. 70 ஆயிரத்தை இன்று மீண்டும் தொட்டது.