
நொய்யல்,
கவுண்டன்புதூர், செட்டித்தோட்டம், செல்வநகர், முத்தனூர் வழியாக புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உபரிநீர் கால்வாய் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டது. இந்த உபரிநீர் கால்வாய் வழியாக இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்லும் வகையில் இந்த கால்வாய் வெட்டப்பட்டது. இந்நிலையில் இந்த கால்வாய் வழியாக உபரிநீரும், மழை காலங்களில் மழைநீரும் புகழூர் வாய்க்கால் ஓரத்தில் உள்ள குளத்தின் வழியாக சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட பகுதியில் உபரிநீர் கால்வாய் தூர்வாரப்பட்டது. ஆனால் குளத்தில் முளைத்திருந்த செடி, கொடிகள், சம்புகள் அகற்றப்படவில்லை. கடந்த சில மாதத்திற்கு முன் தூர் வாரப்பட்ட உபரிநீர் கால்வாய் முழுவதும் மீண்டும் ஏராளமான செடி, கொடிகள், சம்புகள் முளைத்தன.
இதன் காரணமாக உபரிநீர் மற்றும் மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் இல்லாததால் மழைக்காலங்களில் அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உபரிநீர் கால்வாய் மற்றும் குளத்தில் முளைத்துள்ள செடி, கொடிகளையும், சம்புகளையும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றி தூர்வாரி உபரிநீர் மற்றும் மழைநீர் வீடுகளுக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என "தினத்தந்தி" நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அந்த செய்தியை பார்த்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக புகழூர் கால்வாய் அருகே உள்ள குளத்தையும், உபரிநீர் கால்வாயையும் தூர்வாரி மழைநீர் மற்றும் உபரிநீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.