
நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் நடிப்பில் வெளியான 'மாளிகப்புர'ம் திரைப்படமும் கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'மார்கோ'. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது. இயக்குநர் வினய் கோவிந்த் இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான 'கெட் செட் பேபி' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய உன்னி முகுந்தன் முத்தம் மற்றும் நெருக்கமான காட்சிகளைத் தன் படங்களில் தவிர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார். முக்கியமாக, "நான் அனைவருக்குமான நடிகனாக இருக்க விரும்புவதால் கடந்த 7 ஆண்டுகளாக நான் தேர்ந்தெடுக்கும் கதைகளில் காதல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கிடையாது. அதிலும் முத்தம் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதைத் தவிர்த்து வருகிறேன். பலரும் முத்தக்காட்சிகளில் நடிப்பது ஒன்றும் தவறில்லை என சில உதாரண நடிகர்களைச் சொல்வார்கள்.ஒரு ஆக்சன் காட்சியில் எப்படி சண்டைக் கலைஞர் உடலில் கை படாமலேயே அடித்த மாதிரி காட்டமுடிகிறதோ அதேபோல் நெருக்கமான காட்சிகளிலும் செய்யலாம். அதனால், நான் முத்தக்காட்சிகளைத் தவிர்த்து வருகிறேன். வேறு யாராவது அதை செய்தால் அதை தவறு என சொல்லமாட்டேன். என் திரைப்படத் தேர்வில் அவை இல்லை அவ்வளவுதான்" எனத் தெரிவித்துள்ளார்.