முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும்: புதிய சட்டத்தை கொண்டு வர ஆந்திரா முடிவு

4 weeks ago 12

ஐதராபாத்: முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட புதிய சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக ஆந்திரா முதல்வர் கூறினார். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘ஆந்திரா மாநிலத்தில் வசிப்பவர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆந்திராவில் அதிகரித்து வரும் முதியோர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த ஆலோசனை வழங்கப்படுகிறது. மக்கள் தொகை மேலாண்மைக்கு மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.

அதன்படி அதிக குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதுமட்டுமின்றி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வழிவகை செய்யப்படும். அதிக குழந்தைகளைக் கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற சட்டத்தை முன்பு கொண்டு வந்தோம். ஆனால் இப்போது அந்தச் சட்டத்தை ஒழித்துவிட்டு, அதனை மாற்ற முடிவு செய்துள்ளோம். அதிக குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. தென் மாநிலங்களில், குறிப்பாக ஆந்திராவில் அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கை கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.

முதியோர் அதிகம் கொண்ட ஜப்பான், சீனா உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் இந்த பிரச்சனையில் போராடி வருகின்றன. இளைஞர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு அல்லது வெளிநாடுகளுக்குச் செல்வதால், தென்னிந்தியாவில் இந்தப் பிரச்னை அதிகரித்து வருகிறது. தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. தென்மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் 1.6 சதவீதமாக உள்ளது; இது தேசிய விகிதமான 2.1-ஐ விட மிகவும் குறைவு. இதே நிலைமை நீடித்தால், 2047ம் ஆண்டுக்குள் நமது முதியோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

ஆந்திராவில் மட்டுமல்ல, நாட்டின் பல கிராமங்களிலும் இப்போது முதியோர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கான எனது முந்தைய முயற்சிகளை மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். வேகமாக அதிகரித்து வரும் மக்கள்தொகை காரணமாக இயற்கை வளங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது’ என்று கூறினார்.

The post முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும்: புதிய சட்டத்தை கொண்டு வர ஆந்திரா முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article