நன்றி குங்குமம் தோழி
‘‘காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன். எந்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்” என்று மகாகவி பாரதியார் பாடினார். இன்றைய காலகட்டத்தில் முதியோர்கள் இப்படித்தான் தைரியமாக தங்களது வாழ்வினை எதிர்கொண்டு வருகிறார்கள். இன்று பலதரப்பினரும் முதியோர் நலன் குறித்து நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அவ்வகையில் ‘‘முதுமை தவிர்க்க முடியாதது என்றாலும், முதுமையில் வரக்கூடிய நோய்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தடுப்பதில் முன்னெச்சரிக்கை அவசியம்” என்கிறார்கள் பிசியோதெரபிஸ்டுகளான விஜி பாலாஜி மற்றும் சுனந்தா சம்பத்குமார். இவர்கள் இருவரும் இணைந்து ‘குரோயிங் யங்’ என்ற பெயரில் முதியோருக்கென சிறப்பு பிட்னெஸ் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்கள். முதியோர் நலம், அவர்களுக்கான பிட்னெஸ் பயிற்சிகள், வாக்கத்தான் போன்றவை குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்கள்.
முதியோர்கள் சந்திக்கும் பிரச்னைகள்…
இன்றைக்கு, ‘முதியோர் நலம்’ என்பதும் பலவிதத்திலும் கேள்விக்குறியாக உள்ளது. மருத்துவர்களின் ஆய்வின்படி பெரும்பாலான முதியோரின் உடல் நலக்குறைவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஐம்பத்தைந்து வயதிற்கு மேல் எலும்பு மற்றும் நரம்பு மண்டலங்கள் நிறைய மாற்றங்களை அடைகிறது. இதனால் ஒட்டு மொத்தமாகவே முதியோர்கள் சந்திக்கும் உடல்நல பிரச்னைகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதியோர்களுக்கு மட்டுமே என்றில்லை. எல்லா வயதினருக்குமே நோய்கள் வரும், போகும். ஆனால், முதியோர்கள் நோய் வருவதற்கு முன்னரே தங்களை காத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். முதுமையில் ஏற்படும் நோய்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளையும் நாம் தெரிந்து கொண்டு, அவற்றை தடுத்து நலமாக வாழ உதவுவதும் மிகவும் முக்கியமான ஒன்று. தற்போது முதியோர் சந்திக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணத்தான் முதியோருக்கென சிறப்பு பிட்னெஸ் பயிற்சிகளை அளித்து வருகிறோம். குறிப்பாக WHO வகுத்து கொடுத்துள்ள விதிமுறைகள் மற்றும் வழிகாட்டிகளுக்கு உட்பட்டு நாங்கள் முதியோர்களுக்கென சின்னச் சின்ன பிட்னெஸ் பயிற்சிகளை வடிவமைத்து சொல்லித் தருகிறோம்.
பிட்னெஸ் பயிற்சிகள்…
ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்தப் பயிற்சியினை மேற்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு பயிற்சிகளை நாங்க அளித்து வருகிறோம். ஒவ்வொரு நபர்
களின் வயது, உடல்நல பிரச்னைகளுக்கு ஏற்ப பயிற்சிகளில் சிறு மாற்றங்களை புகுத்தி தனி கவனம் செலுத்துகிறோம். முதியோர்களை பொறுத்தவரை கடினமான பயிற்சிகளை அவர்களுக்கு கொடுக்க முடியாது. ஆனால் அவர்கள் மிதமான பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் பயிற்சி செய்யலாம் என்கிற தகவலை உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ளது. இந்தப் பயிற்சிகளோடு Strength Training மற்றும் Balance பயிற்சிகளை வாரத்திற்கு இருமுறை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கு வரும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம் அளிக்கிறோம். காரணம், முதியோர்கள் மட்டுமில்லை குறைந்த வயதில் உள்ளவர்களுக்கும் அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப பிட்னெஸ் பயிற்சிகள் மாறுபடும். இதுவரை நாங்கள் எங்களது பயிற்சி மையத்தின் மூலம் 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை முதியோர்களுக்காக நடத்தி உள்ளோம். இதில் 1500க்கும் மேற்பட்டவர்கள் எங்களிடம் பயிற்சி பெற்று இருக்கிறார்கள்.
பயிற்சிகளால் ஏற்படும் நன்மைகள்…
பயிற்சிகளை மேற்கொள்வதால் இவர்களின் உடல் மற்றும் மனநலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதை கண்கூடாக பார்க்கலாம். இவர்களின் நடை கூட மாறுபடும் என்பதுதான் இதன் சிறப்பு. வயதானதால் ஏற்படும் பயம், பதட்டம், மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் பெருமளவு குறையும். சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் தெரியும். எலும்புகள் தேய்மானம் குறையும். ஜீரண உறுப்பு சீரடையும். அல்சைமர் போன்றவை வராமல் பாதுகாக்க உதவும். மொத்தத்தில் அவர்கள் மகிழ்ச்சியாகவும், தன்னம்பிக்கையுடனும் தங்களது அன்றாட வாழ்வை கழிக்க இத்தகைய பயிற்சிகள் பெரிதும் உதவி வருகிறது.
முதியோர் நலம் குறித்த விழிப்புணர்வு…
முன்பை விட இப்போது முதியவர்கள் தங்களின் நலனில் அக்கறை காட்டி வருகிறார்கள். இதுவே நல்ல மாற்றம்தான். ஆனால் இதனை ஒரு சிலர் மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுத்துகிறார்கள். அதனால் அவர்களின் நலன் குறித்து நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது. முதலில் முதியோர்கள் இதனை நன்றாக புரிந்துகொள்ள
வேண்டும். வயசான பிறகு, ‘இந்த வயசில் பயிற்சியா அதெல்லாம் வேண்டாம்… வயசாயிடுச்சி இனி எங்களுக்கு என்ன இருக்கிறது’ என்ற விட்டேத்தியான மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் பயிற்சியில் ஈடுபட்ட பிறகு அவ்வாறு நினைத்தவர்களில் பல மாற்றம் தென்படுகிறது. ஒருநாள் விடுமுறை கூட எடுக்காமல் மிகவும் உற்சாகமாக பயிற்சிக்கு வரும் முதியவர்களை காண முடிகிறது. இன்றைய இளம் தலைமுறை பிள்ளைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வு நிறைய இருக்கிறது. அதனால் பலர் தங்களது பெற்றோர்களை இப்பயிற்சியில் சேர்க்க ஆர்வமாக உள்ளனர்.
ஆன்லைன் வகுப்புகள்…
கொரோனாவிற்கு முன்பு வரை நேரடியாகத்தான் பயிற்சி அளித்தோம். அதன் பிறகு மக்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு பழகி விட்டார்கள். முதியோரை பொறுத்தவரை ஆன்லைன் வகுப்புகளே சிறந்ததாக கருதுகிறார்கள். நேரடியாக பயிற்சிக்கு வரும் போது, உடன் துணைக்கு யாராவது ஒருவரை அழைத்து வரவேண்டி இருக்கிறது. பயணம் செய்வது அவர்களுக்கு எளிதாக இருப்பதில்லை. ஆன்லைன் வகுப்புகள் மூலமாக வீட்டிலிருந்தே பயிற்சி மேற்கொள்வது எளிதாக இருக்கிறது. இதனை அவர்கள் வெளிநாட்டிற்கு சென்றாலும் தடை இல்லாமல் தொடர உதவுகிறது. மேலும் நேரடி வகுப்புகளில் இருப்பது போல் குழுவாக செயல்படுவது, தோழமை, சக முதியோர்கள் நட்பு போன்ற விஷயங்களை ஆன்லைனிலும் ஏற்படுத்தி வருகிறோம். அதனை அவ்வப்போது நேரடி சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் ஒருங்கிணைக்கிறோம். குழுவாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணம், நகர்ப்புறங்களில் உள்ளவர்களிடம் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இது கிராமப்புறங்களிலும் பரவி வருகிறது என்பது நல்ல விஷயம்தானே.
வாக்கத்தான்…
முதியோர்கள் நலம் குறித்த விழிப்புணர்வு செய்திகளை நாடெங்கும் ஏற்படுத்த எங்களின் முதல் முயற்சிதான் வாக்கத்தான். இவ்வாண்டு கடந்த மாதம் முதல் தேதி அன்று சென்னையில் எழும்பூரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் முதியோர்களுக்கான வாக்கத்தான் நிகழ்ச்சியை ‘Senior Stroll-a-Thon 2024’ என்கிற பெயரில் நடத்தினோம். இதில் முன்னூறுக்கும் மேற்பட்ட முதியோர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வுக்கு இவர்கள் கொடுத்த ஆதரவு வரவேற்கத்தக்க விதத்தில் இருந்தது எங்களுக்கே ஆச்சரியம் தான். குறிப்பிட்ட நாளில் விடியற்காலையில் ஐந்து மணிக்கு முன்பே எங்களுக்காக ஆர்வமுடன் காத்திருந்தனர் பலர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மெடல்களையும், சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தோம். இன்னும் எதிர்காலத்தில் இது போன்று நிறைய செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
எதிர்கால திட்டங்கள்…
தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிளப்களில் நேரடி நிகழ்ச்சிகள் நடத்தி இது குறித்து பல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் நிறைய முதியோருக்கான விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கென நிறைய பயிற்சி பெற்ற பிசியோதெரபிஸ்டுகளை உருவாக்கி விரைவில் களத்தில் இறங்க உள்ளோம். புதிய பயிற்சிகளை புகுத்தும் எண்ணம் உள்ளது. முதியோர்கள் நாட்டின் சொத்து. அவர்களை பேணி பாதுகாப்பது நம் கடமை. அவர்களுக்கென பலதரப்பட்ட விழாக்கள், வாக்கத்தான் போன்ற சிறந்த நிகழ்ச்சிகளை நடத்தி உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் வாழ தயார்படுத்துவதும் மிக முக்கியமான ஒன்று. அதை நோக்கிய பயணங்களுடன் எங்களது அடுத்த கட்ட பணிகளை தொடர இருக்கிறோம்.
முதியோர் நலன்…
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் முதியோருக்கு சுதந்திரம் கொடுப்பது, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் பங்களிப்பை எல்லா விஷயங்களிலும் பெறுவது, மதிப்பது போன்றவை மிகவும் தேவையான ஒன்று. வயது கூடக்கூட அவர்களின் தேவையை பூர்த்தி செய்தல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தல், சமூகம், கலாசாரம், அரசியல் போன்றவற்றிலும் அவர்களது பங்களிப்பை உறுதிசெய்தல் மிகவும் அவசியம் என்று நினைக்கிறோம். எங்களின் இந்த நீண்ட நெடிய பயணத்தில் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் சப்போர்ட்டும்தான் எங்களை திறம்பட இயங்க வைக்கிறது. மூப்படைதல் என்பது இயல்பு, ஆரோக்கியமான மூப்படைதலுக்கு அடிப்படை உடற்பயிற்சியும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையும்தான். இம்மாதம் முதல் தேதியில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாட இருக்கிறோம். இனி வரும் காலங்களில் முதியோர் நலத்தையும் ஆரோக்கியத்தையும் காப்போம் என்கிற உறுதியுடன் களமிறங்குவோம்’’ என்கிறார்கள் விஜி பாலாஜி மற்றும் சுனந்தா சம்பத்குமார்.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்
The post முதியோர் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சிகள் அவசியம்! appeared first on Dinakaran.