தாரமங்கலம், ஜூலை 2: தாரமங்கலம் அருகே பெரியசோரகை பகுதியைச் சேர்ந்தவர் மணி(55) என்பவர், கடந்த 2023ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கசுவரெட்டியப்பட்டி பகுதியைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளியான செல்லான்(எ) செல்வராஜ்(63) என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர், கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி கருக்குபட்டி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த ராஜம்மாள்(94) என்பவரை தோசை கரண்டியால் தாக்கி கொடூரமாக கொலை செய்தார். இதையடுத்து, செல்வராஜ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையிலடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்பி கவுதம் கோயல் பரிந்துரை செய்தார். இதன்பேரில், கலெக்டர் பிருந்தாதேவி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான நகலை தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்வராஜிடம் வழங்கினார்.
The post முதியவர் மீது குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.